தமிழகத்தில் கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் செய்யப்படுவதால் கொரோனா பரவல் பெருமளவு தடுக்கப்பட்டிருக்கிறது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2020-08-22 00:21 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொரோனா நோய் தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.243 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் நிறைவுற்ற பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகளவில் மக்களை அச்சுறுத்தி, இந்தியாவிலும், தமிழகத்திலும் பரவி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து உள்ளது. அதை தடுப்பதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. லாரி மற்றும் ரிக் தொழில் மேற்கொள்பவர்கள், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு சென்று வந்தாலும் கூட, மாவட்ட நிர்வாகமும், மருத்துவத்துறையும், உள்ளாட்சித்துறையும், வருவாய்த்துறையும் தொடர்ந்து பரிசோதனைகளை மேற்கொண்டு, நோய் அறிகுறி தென்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி, சரியான முறையில் நடவடிக்கைகள் மேற்கொண்டதன் விளைவாக இந்த மாவட்டம் நோய் தொற்று தடுப்பில் முதன்மை மாவட்டமாக விளங்குவது பெருமைக்குரியதாகும்.

68 ஆயிரம் பரிசோதனைகள்

மாவட்ட நிர்வாகம் இந்த நோய் தடுப்பு பணியில் முழுமையாக ஈடுபட்டதன் காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசை பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர்கள் மனநிறைவு பெறுகின்ற வகையில் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேபோல், பரிசோதனை நிலையங்களும் அதிகமாக உள்ளன. தமிழ்நாடு முழுவதும், நாள் ஒன்றுக்கு சுமார் 68 ஆயிரம் நபர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால், இந்நோய் பரவல் தமிழகத்தில் பெருமளவில் தடுக்கப்பட்டிருக்கிறது.

சாலை விரிவாக்கம்

திருச்செங்கோட்டில் இருந்து சங்ககிரி வழியாக ஓமலூர் வரையுள்ள சாலையை 4 வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. திருச்செங்கோட்டில் இருந்து பள்ளிபாளையம் வழியாக ஈரோடு செல்கின்ற சாலையையும் புதிதாக அமைக்க இருக்கின்றோம். அங்கு கூட குறுகலாக இருக்கும் இடங்களில் உயர்மட்ட பாலம் வேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், சுமார் 3.40 கிலோ மீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட பாலமும் அந்த சாலையில் அமைக்கப்படுகிறது.

நாமக்கல்லில் இருந்து முசிறி வரையுள்ள சாலையையும், நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம் வரை சாலையையும் விரிவாக்கம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், நகரத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நாமக்கல்லில் புறவழிச்சாலை அமைக்கின்ற பணியும் விரைவில் தொடங்க உள்ளோம். அதற்கான நிலம் எடுப்பு பணி நடைபெற்று வருகிறது. திருச்செங்கோடு, ராசிபுரத்திலும் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

கூட்டுக்குடிநீர் திட்டம்

நாமக்கல் மாவட்டத்திற்கு அரசு சட்டக்கல்லூரியை உருவாக்கி தந்ததும் இந்த அரசு தான். மல்லசமுத்திரம், எலச்சிப்பாளையம் மற்றும் பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 724 குடியிருப்புகளுக்கு ரூ.250 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றுவதற்கு அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 1,648 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.133.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. திருச்செங்கோடு மற்றும் ராசிபுரம் நகராட்சிகளில் 1,052 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு ரூ.92.09 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்