விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கக்கோரி தஞ்சையில், இந்து முன்னணியினர் சாலை மறியல்

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதிக்கக் கோரி தஞ்சையில், சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர். டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நிர்வாகிகள் 2 பேர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2020-08-22 00:04 GMT
தஞ்சாவூர்,

இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று(சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என இந்து அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்து அமைப்புகளுடன் கலெக்டர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக அரசின் உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இவற்றை பல இந்து அமைப்பினர் ஏற்க மறுத்து விட்டனர்.

பறிமுதல்

சில அமைப்பினர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு செய்வோம் என அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் திருச்சியில் இருந்து சரக்கு ஆட்டோவில் 8 விநாயகர் சிலைகளை ஏற்றிக்கொண்டு இந்து முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஈசானசிவம் உள்பட நிர்வாகிகள் 3 பேர் தஞ்சையை நோக்கி வந்தனர்.

தஞ்சை-திருச்சி சாலையில் செங்கிப்பட்டி அருகே புதுக்குடி சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விநாயகர் சிலைகளுடன் வந்த சரக்கு ஆட்டோவை வழிமறித்தனர். ஏற்கனவே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதால், விநாயகர் சிலைகளை போலீசார் பறிமுதல் செய்து பூதலூர் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் 3 பேரை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

ஊர்வலம்

இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை காந்திஜி சாலையில் உள்ள தர்கா மற்றும் பள்ளிவாசல் அருகே விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வோம் என இந்து முன்னணியினர் அறிவித்து இருந்தனர். இதனால் இர்வின் பாலம் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்து முன்னணியினர் தஞ்சை காந்திஜி சாலையில் தர்கா அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் நேற்று மதியம் ஒன்று திரண்டனர். பின்னர் மாவட்ட செயலாளர் குபேந்திரன் தலைமையில் பொதுச்செயலாளர் முருகன் முன்னிலையில் நிர்வாகிகள் சிலர், 1½ அடி உயர விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.

அவர்கள் காந்திஜி சாலையின் குறுக்கே நின்று கொண்டு விநாயகர் சிலையை பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய அனுமதிக்க வேண்டும். பறிமுதல் செய்த விநாயகர் சிலைகளை ஒப்படைக்க வேண்டும். கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

சாலை மறியல்

இதை அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன்(மேற்கு), கவிதா(கிழக்கு) மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது திடீரென இந்து முன்னணியினர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் 10 நிமிடம் நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றன.

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக போலீசார் முயற்சி செய்தனர். அப்போது இந்து முன்னணி நிர்வாகிகள் 2 பேர், திடீரென போலீசாரை தள்ளிவிட்டு அருகில் இருந்த டிரான்ஸ்பார்மர் மேல் ஏறி தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். உடனே அதிரடிபடை போலீசார் விரைந்து சென்று அந்த 2 பேரையும் பிடித்து, டிரான்ஸ்பார்மர் மீது ஏறவிடாமல் தடுத்தனர்.

15 பேர் கைது

அப்போது அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும், மறியலில் ஈடுபட்டவர்களையும் போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்து வேனில் ஏற்றினர். மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்