கீழ்வில்லிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம்

கீழ்வில்லிவலம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு நேர்காணலுக்கு வந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update:2020-08-21 10:19 IST
வந்தவாசி,

வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது கீழ்வில்லிவலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பதவிக்கான நேர்காணல் கீழ்வில்லிவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று நடைபெறும் என விண்ணப்பித்த 100-க்கும் மேற்பட்டோருக்கு தெள்ளார் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அழைப்பானை கடிதம் அனுப்பியிருந்தது.

அதன்படி நேற்று 50-க்கும் மேற்பட்டோர் நேர்காணலில் கலந்துகொள்ள கீழ்வில்லிவலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று காத்திருந்தனர். அப்போது ஊராட்சி செயலாளர் பதவி நேர்காணலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதால் நேர்காணல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த நேர்காணலுக்கு வந்தவர்கள் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதுடன் தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வந்தவாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கராமன் மற்றும் தெள்ளார் போலீசார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்