விழுப்புரம் அருகே இளம் பெண் அடித்துக்கொலை கணவரை பிடித்து போலீசார் விசாரணை

விழுப்புரம் அருகே குடும்ப தகராறில் இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-08-21 03:38 GMT
விழுப்புரம்,

புதுச்சேரி மாநிலம் அரியூரை சேர்ந்தவர் பிரேமா (வயது 19). இவருக்கும் விழுப்புரம் அருகே தாதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கலியபெருமாள் என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. கலியபெருமாள், அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் கடந்த சில மாதங்களாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

பெண் அடித்துக்கொலை

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் குடிபோதையில் கலியபெருமாள், வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள், அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பிரேமாவின் தலையில் சரமாரியாக தாக்கினார்.

இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனே கலியபெருமாள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் பிரேமாவை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பிரேமா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக கலியபெருமாளை போலீசார் மடக்கிப்பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்