கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவ கல்லூரிகள் கையகப்படுத்தப்படும் நாராயணசாமி எச்சரிக்கை

கொரோனா நோயாளிகளை அனுமதிக்காத தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் அரசால் கையகப்படுத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்தார்.;

Update: 2020-08-21 01:00 GMT
புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புதுவை மாநிலத்தில் இப்போது நாம் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை செய்து வருகிறோம். நேற்று ஒரே நாளில் 554 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 60 சதவீதம் பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள்தான் உள்ளது. அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தாலே போதுமானது.

தனியார் மருத்துவகல்லூரி மருத்துவமனைகளில் 300 படுக்கைகளை பெற ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. ஆனால் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தேவையான படுக்கைகளை தரவில்லை. எனவே அதை அரசு எடுத்து, கொரோனா மருத்துவமனையாக ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த பேரிடர் காலத்தில் அரசுக்கு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் ஒத்துழைக்கவேண்டும். அவ்வாறு ஒத்துழைக்காத மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளை அரசு தானாக முன்வந்து கையகப்படுத்தி கொள்ளும்.

இந்த நெருக்கடியான காலகட்டத்தில் தொற்று அதிகமாக பெருகிவரும். இதை தவிர்க்க பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

ஒருவருக்கு தொற்று உள்ளதா? என்பதை கண்டறியும் ‘ட்ருநெட்’ கருவியும் நமக்கும் கிடைத்துள்ளது. இதன் மூலம் 2 மணி நேரத்தில் சோதனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். 30 நிமிடத்தில் முடிவு தெரியும் ஆண்டிஜன் கிட்டும் வாங்கப்பட்டுள்ளது. போதுமான பணியாளர்களை நியமிப்பது, ஆம்புலன்சு வாங்குவது போன்ற பணிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கவனித்து வருகிறார்.

இந்த சமயத்தில் புதுச்சேரிக்கு மத்திய குழுவை அனுப்ப கவர்னர் கிரண்பெடி கோரிக்கை வைத்துள்ளதாக பத்திரிகைகளில் படித்தேன். மத்திய குழு வருவதற்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் நமக்கு தேவையான கருத்துகளை தருவார்கள். நாம் அதன்படி நடக்க முடியும்.

ஊரடங்கினை பிறப்பித்த மத்திய அரசுதான் தளர்வுகளையும் அறிவித்தது. புதுவை மட்டும் இந்த தொற்றினால் பாதிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றினை தடுக்க அனைவரும் போராடும் நேரத்தில் கவர்னர் உத்தரவுகளை மட்டும் போடுவதால் எதுவும் செய்ய முடியாது. களத்தில் இறங்கி பணிபுரிபவர்களுக்கு நன்றி சொல்லும் நேரம் இது. மற்றவர்களை இந்த நேரத்தில் குறை சொல்லக்கூடாது. மருத்துவம் செய்ய தேவையான உபகரணங்கள் வாங்க அவர் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மேலும் செய்திகள்