சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா கைதாவாரா? சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர்

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். நடிகை ரியா கைதாவரா? என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-08-21 00:40 GMT
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் நடிகை ரியா கைதாவாரா? சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர்
மும்பை,

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை மும்பை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பீகாரில் வசித்து வரும் அவரது தந்தை பாட்னா போலீசில் சுஷாந்த் சிங்கின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது புகார் அளித்தார். அதில் ரியா தனது மகனை தற்கொலைக்கு தூண்டியதாகவும் மற்றும் பணமோசடி செய்ததாகவும் கூறியிருந்தார்.

இந்த வழக்கு தற்போது சி.பி.ஐ. வசம் வந்து உள்ளது. இதற்கு சுப்ரீம் கோர்ட்டும் நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் மும்பை வந்தனர். அவர்கள் 10 நாட்கள் மும்பையில் முகாமிட்டு விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சி.பி.ஐ. அதிகாரிகள், மும்பை போலீசார் இதுவரை விசாரணை நடத்திய விவரங்களை கேட்டு பெற உள்ளனர். மேலும் யார்- யாரிடம் எல்லாம் விசாரிக்க வேண்டும் என்ற பட்டியலை தயாரித்து வைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கியமாக நடிகை ரியாவிடம் விசாரிக்க இருப்பதாக தெரிகிறது. இதனால் அவரது மீதான சி.பி.ஐ. பிடி இறுகி உள்ளது. நடிகை ரியா கைது செய்யப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இதனால் சுஷாந்த் சிங் வழக்கு பரபரப்பை எட்டி உள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த மும்பை வந்த பீகார் ஐ.பி.எஸ். அதிகாரி வினய் திவாரியை மாநகராட்சி தனிமைப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனால் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை வந்தால் தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு விண்ணப்பிக்க வேண்டும் என மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியிருந்தார். அதன்படி மும்பை வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் மாநகராட்சியிடம் விண்ணப்பம் அளித்தனர். அதனை ஏற்று அவர்களை தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க மாநகராட்சி அனுமதித்தது.

மேலும் செய்திகள்