கீழப்பழுவூர் அருகே, பூட்டை உடைத்து 2 கோவில்களின் உண்டியலில் இருந்த பணம் திருட்டு

கீழப்பழுவூர் அருகே கோவிலில் விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு, 2 கோவில்களின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

Update: 2020-08-20 23:12 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர் அருகே உள்ள கீழக்குளத்தூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில், மாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், திரவுபதை அம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இந்த கோவில்களில் தினமும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின், மீண்டும் நடைசாத்தப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பூஜைகளுக்கு பின் நடை சாத்தப்பட்டது.

இந்நிலையில் நேற்று அதிகாலை மர்மநபர்கள் சிலர் அங்குள்ள பிள்ளையார் கோவிலுக்குள் புகுந்துள்ளனர். அவர்கள் அங்கு விளக்கேற்றி சாமி கும்பிட்டுவிட்டு அருகே உள்ள மாரியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அங்குள்ள உண்டியலை உடைத்து பார்த்தபோது, அதில் பணம், நகை ஏதும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்தனர்.

திருட்டு

இதையடுத்து அதே கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடினர். மேலும் அந்த கிராமத்தின் மற்றொருபுறம் உள்ள திரவுபதை அம்மன் கோவிலுக்கும் அந்த மர்ம நபர்கள் சென்று பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர்.

இந்நிலையில் நேற்று காலை பிள்ளையார் கோவில் வழியாக வந்த, அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், அங்கு விளக்கு எரிந்ததை பார்த்து சந்தேகமடைந்தார். இதையடுத்து அருகே உள்ள மாரியம்மன் கோவிலில் பார்த்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு முயற்சி நடந்தது தெரியவந்தது. இது பற்றி அவர், கிராம மக்களுக்கு தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் மற்ற கோவில்களுக்கும் சென்று பார்த்தனர். அப்போது 2 கோவில்களின் உண்டியலை உடைத்து பணம் திருட்டுபோனது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

கிராம மக்கள் கொடுத்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் போலீசார் அங்கு வந்து கோவில்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கோவில்களில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிய மோப்பநாய் பின்னர் நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் கோவில்களுக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தில் உள்ள 2 கோவில்களில் உண்டியலை உடைத்து திருட்டும், ஒரு கோவிலில் திருட்டு முயற்சியும் நடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்