கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா

கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.பி., 2 எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-08-20 22:47 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் மக்கள் பிரதிநிதிகளை கொரோனா தொடர்ந்து தாக்கி வருகிறது. முதல்-மந்திரி எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மந்திரிகள் சி.டி.ரவி, ஆனந்த்சிங், பி.சி.பட்டீல், எஸ்.டி.சோமசேகர், ஸ்ரீராமுலு ஆகியோரையும் கொரோனா தாக்கி இருந்தது.

இதுபோல எம்.பி.க்கள் சுமலதா(மண்டியா), பகவந்த் கூபா(பீதர்) சீனிவாச பிரசாத்(சாம்ராஜ்நகர்) கரடி சங்கண்ணா(கொப்பல்) உள்ளிட்டோரும், சுயேச்சை எம்.எல்.ஏ. சரத் பச்சேகவுடா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்), பா.ஜனதா கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் என 45 பேருக்கு வைரஸ் தாக்கி இருந்தது.

இந்த நிலையில் கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.பி., எம்.எல்.ஏ.வை கொரோனா தாக்கி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

கலபுரகி தொகுதி பா.ஜனதா எம்.பி.யாக இருந்து வருபவர் உமேஷ் ஜாதவ். இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல், சளி தொல்லை இருந்தது. இதனால் அவர் கலபுரகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் உமேஷ் ஜாதவ் தன்னை கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை உமேஷ் ஜாதவ் எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் சிகிச்சைக்காக பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே உமேஷ் ஜாதவ் எம்.பி.யுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அவரது மகனும், சிஞ்சோலி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வுமான அவினாஷ் ஜாதவை, சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி இருந்தனர். அவருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ரேபிட் ஆன்டிஜென் கருவி மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவினாஷ் ஜாதவ் எம்.எல்.ஏ.வுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவரும் பவுரிங் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு 2 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த ஆஸ்பத்திரியில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மந்திரி ஸ்ரீராமுலு சிகிச்சை பெற்று குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு உமேஷ் ஜாதவ் எம்.பி.யை, கர்நாடக ஜவுளித்துறை மந்திரி ஸ்ரீமந்த் பட்டீல் சந்தித்து பேசி இருந்தார். இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். இந்த நிலையில் உத்தர கன்னடா மாவட்டம் பட்கல் தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. சுனில் நாயக்கிற்கும் நேற்று மதியம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். உமேஷ் ஜாதவ் எம்.பி., அவினாஷ் ஜாதவ், சுனில் நாயக் ஆகியோரை சேர்த்து கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்து உள்ளது.

மேலும் செய்திகள்