வந்தவாசி அருகே, ஜப்திகாரணியில் 10-ம் நூற்றாண்டு சமண கல்வெட்டு கண்டெடுப்பு

வந்தவாசி அருகே 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சமணக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

Update: 2020-08-20 06:34 GMT
வந்தவாசி,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே ஜப்திகாரணியில் உள்ள ஏரிக்கரையைச் சீர்செய்யும் பணி நடந்தது. அங்கு கிடைத்த ஒரு தூணில் கல்வெட்டு இருப்பதாக கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜி மற்றும் சுரேஷ் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்துக்கு தெரிவித்தனர்.

அதன்பேரில் நடுவத்தின் செயலர் ச.பாலமுருகன், ஆய்வாளர்கள் பழனிசாமி, எ.சுதாகர், ஏ.வெங்கடேஷ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அந்தக் கல்வெட்டை படியெடுத்தனர். அந்தக் கல்வெட்டை ஆய்வு செய்த கல்வெட்டு அறிஞர் சு.ராஜகோபால் கூறியதாவது:-

இந்தக் கல்வெட்டு 26 வரிகள் கொண்டது. அதில் எழுதப்பட்டுள்ள எழுத்து 10-ம் நூற்றாண்டு எழுத்தைப் போன்று காணப்படுகிறது. எனவே அந்தக் கல்வெட்டு 10-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம். இதில் மன்னர் பெயர் மற்றும் ஆண்டு குறிக்கப்படாமல் உள்ளது.

அக்காலத்தில் வெண்குன்ற கோட்டத்து பொன்னூர் நாட்டில் இருந்த ஸ்ரீதண்டிபுரம் என்ற ஊரில் இயங்கிய சமணப் பள்ளியில் நந்தவனம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, தொட்டி மூலம் நீர் இறைத்து பாய்ச்சுவதற்கு கரிகாலர் மகன் சந்திராதித்தனால் நிலம் தானமாக வழங்கப்பட்ட செய்தி கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இக்கல்வெட்டில் மன்னர் பெயர் மற்றும் ஆண்டு குறிக்கப்படாததால் அக்காலத்தில் இப்பகுதியில் நிலவிய குழப்பமான நிலைமையை இக்கல்வெட்டு எடுத்துக் காட்டுவதாக தொல்லியல் அறிஞர் எ.சுப்புராயலு தெரிவித்துள்ளார்.

இக்கல்வெட்டு மூலம் அந்த பகுதியில் சமணப்பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ளது என்றும் அதில் நந்தவனம் அமைக்கப்பட்டு நீர் பாய்ச்சியதும் தெரிய வந்துள்ளது. வந்தவாசி பகுதியில் நிறைய சமணத் தலங்கள் உள்ளன. இதேபோல் வெடால் என்ற ஊரில் சமணப்பள்ளி செயல்பட்டதும் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. எனினும் இக்கல்வெட்டில் குறிக்கப்பட்ட ஸ்ரீதண்டிபுரம் என்பது அருகில் உள்ள திறக்கோல் என்ற சமண ஊராக இருக்கலாம்.

ஜப்திகாரணியில் கிடைத்த இக்கல்வெட்டு சமண வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஏரிக்கரையில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த இக்கல்வெட்டு தற்போது ஜப்திகாரணி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்