தேனி மாவட்டத்தில், மேலும் 5 பேரின் உயிரை குடித்த கொரோனா - புதிதாக 288 பேருக்கு தொற்று
தேனி மாவட்டத்தில் மேலும் 5 பேரின் உயிரை கொரோனா குடித்த நிலையில், 288 பேருக்கு புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அதே வேளையில் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 484 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. அவர்களில் 161 பேர் பலியாகி இருந்தனர்.
இந்தநிலையில், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அலுவலகத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர் ஆகியோர் உள்பட மேலும் 288 பேருக்கு நேற்று புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 772 ஆக அதிகரித்து உள்ளது.
இதேபோல், கொரோனா அறிகுறியுடன் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெரியகுளம் முருகமலை நகரை சேர்ந்த 67 வயது முதியவர், பெரியகுளம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த 42 வயது ஆண், வடகரையை சேர்ந்த 51 வயது பெண், டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த 40 வயது பெண், அல்லிநகரத்தை சேர்ந்த 68 வயது மூதாட்டி ஆகிய 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஆண்டிப்பட்டி அருகே உள்ள புள்ளிமான்கோம்பையை சேர்ந்த 60 வயது மூதாட்டி, தேனி அருகே குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த 71 வயது மூதாட்டி ஆகியோரும் கொரோனா பரிசோதனை முடிவு தெரிய வரும் முன்பே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.