வேப்பூர் அருகே வாலிபரை எரித்துக் கொன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை - சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

வேப்பூர் அருகே வாலிபரை எரித்துக் கொன்ற தனியார் நிறுவன ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Update: 2020-08-19 23:00 GMT
அண்ணாமலைநகர், 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கல்லூர் மா.புடையூர் சாலையில் வசித்து வந்தவர் தர்மலிங்கம் மகன் செந்தில்குமார் (வயது 34). இவர் வேப்பூரில் சோடா கம்பெனி நடத்தி வந்தார். வேப்பூரை சேர்ந்த இவரது சித்தப்பா நடராஜனின் மகன் தனசேகரன்(39), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். தனசேகரன் தந்தை நடராஜன் இறந்து விட்டதால், அவரது நிலத்தை விற்று தருமாறு தனசேகரன், செந்தில்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் வாரிசு சான்றிதழ் இருந்தால் தான் நிலத்தை விற்க முடியும் என்றார். அப்போது வாரிசு சான்றிதழில் தனது அக்கா புஷ்பவள்ளியின் பெயரை சேர்க்காமல் வாங்க வேண்டும் என தனசேகரன் கூறினார். இதுபற்றி செந்தில்குமார், புஷ்பவள்ளியிடம் கூறியதால் அக்கா-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டு நிலத்தை விற்க முடியாமல் போனது.

இந்நிலையில் கடந்த 2.3.2017 அன்று செந்தில்குமார் சோடா கம்பெனியில் இருந்தார். அப்போது தனசேகரன், செல்போனில் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு வருவதாகவும், தன்னை பேருந்து நிலையத்துக்கு வந்து அழைத்து செல்லுமாறு கூறினார். உடனே அவர் மோட்டார் சைக்கிளில் பேருந்து நிறுத்தத்துக்கு சென்று தனசேகரனை வீட்டுக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.

கழுதூர் வங்கி அருகே சென்ற போது, பின்னால் அமர்ந்திருந்த தனசேகரன், நீ உயிரோடு இருந்தால் நிலத்தை விற்க முடியாது என்று கூறி தான் கேனில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து செந்தில்குமார் மீது ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தனசேகரனை கைது செய்தனர். பின்னர் சில நாட்களில் செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றம் செய்தனர். மேலும் இதுதொடர்பாக சிதம்பரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்ததையடுத்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் நீதிபதி இளவரசன், தனசேகரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் மூத்த வக்கீல் ஞானசேகரன் ஆஜராகி வாதாடினார்.

மேலும் செய்திகள்