மேலூர்- காரைக்குடி நான்கு வழிச்சாலை பணி: 21 இடங்களில் பாலம் அமைக்கப்பட உள்ளது- அதிகாரி தகவல்

மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் 21 இடங்களில் பாலங்கள் அமைக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலை துணை திட்ட மேலாளர் கூறினார்.;

Update: 2020-08-19 22:15 GMT
திருப்பத்தூர்,

மதுரை மாவட்டம் மேலூரில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வரையிலான 45.9 கிலோ மீட்டர் தொலைவிற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் செல்லும் முதல் நான்கு வழிச்சாலையாக இந்த சாலை அமைய உள்ளது.

இந்த சாலைப்பணிக்காக ஏற்கனவே காரைக்குடியில் இருந்து மேலூர் வரை இடம் தேர்வு செய்யப்பட்டு அந்த இடங்களில் உள்ள மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு தற்போது சர்வே பணிகள் முடிவடைந்த நிலையில் காரைக்குடியை அடுத்த தட்டட்டி பகுதியில் இருந்து ஜே.சி.பி எந்திரம் மூலம் இந்த சாலைக்கான இடம் சீரமைக்கப்பட்டு வருகிறது.

மேலூர்-காரைக்குடி நான்கு வழிச்சாலையானது மானாமதுரை-தஞ்சாவூர், மதுரை-திருச்சி, திருச்சி-ராமேசுவரம் ஆகிய 3 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சாலையாகவும் உள்ளது.

இந்த சாலை பணி குறித்து நெடுஞ்சாலை துணை திட்ட மேலாளர் ஆனந்தன் கூறியதாவது:-

மேலூரில் இருந்து காரைக்குடிக்கு அமைக்கும் இந்த புதிய நான்கு வழிச்சாலையால் 14 கிலோ மீட்டர் பயண தூரம் குறைய உள்ளது.

நேராக செல்லும் இந்த சாலையில் வாகன போக்குவரத்திற்கு வேகம் குறையாமல் இருக்கும் வகையில் 19 இடங்களில் தரைப்பாலமும், 2 இடங்களில் மேம்பாலம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளன.

தற்போது குன்றக்குடி-தட்டட்டி ரோடு, திருப்பத்தூர்-மானகிரி ரோடு, திருப்பத்தூர்-கண்டரமாணிக்கம் மேலாக இந்த நான்கு வழிச்சாலை பணி அமைக்கப்பட உள்ளது. பாதரக்குடி அருகே 2.6 கிலோ மீட்டர் புறவழிச்சாலையும், குன்றக்குடி அருகே 8 கிலோ மீட்டர் புறவழிச்சாலையும் அமைகிறது.

10 ஆண்டுகளுக்கு பின்னர் கிராமங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த சாலையை மத்திய அரசு அமைக்கிறது. தற்போதைய ரோட்டிற்கு கீழாக தேசிய நெடுஞ்சாலை செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பழைய சாலைகளில் செல்லும் போக்குவரத்து எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்ட இந்த பணி கொரோனா ஊரடங்கால் வெகுவாக பாதிக்கப்பட்டு தற்போது 5 சதவீத பணிகள் மட்டும் நடைபெற்றுள்ளது.

மேலும் இந்த கொரோனா ஊரடங்கால் தொழிலாளர் பற்றாக்குறை, சாலைப்பணிக்கான பொருட்கள் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சாலை பணியில் மேலூர் அருகே பட்டர் பிளை வடிவிலான ரவுண்டான சந்திப்பு அமைக்கப்பட உள்ளது. மேலூர்-காரைக்குடி தேசிய நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்