தீபாவளியை கொண்டாட துணையாக இருப்போம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை

தீபாவளியை கொண்டாட துணையாக இருப்போம் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-08-19 21:45 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆண்டு முழுவதும் பட்டாசுகள் உற்பத்தி நடைபெற்று வரும். விருதுநகர் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகளில், நேரடியாக சுமார் 2 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களாக நாடு முழுவதும் அனைத்து வகையான திருவிழாக்கள், திருமண விழா, கோவில் விழாக்களுக்கு ஊரடங்கு காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனால் சிவகாசியில் தயாரான பட்டாசுகள், வடமாநில ஆர்டர்கள் வராததால் கடுமையான தேக்கத்தில் உள்ளது. இதனால் சிவகாசி பட்டாசு ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளன.

பெரும்பாலான பட்டாசு ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். சில நிறுவனங்கள் மட்டும் குறைந்த அளவில் பணியாளர்களுடன், உற்பத்தியை குறைத்து செய்து வருகின்றனர். இந்தியா முழுவதும் கொண்டாடும் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 85 நாட்கள் மட்டுமே இருக்கின்றது.

இதுவரை கொரோனா தொற்று பரவலும் குறையவில்லை. இதனால் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுமா என்ற சந்தேகம், பட்டாசு தயாரிப்பாளர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் கண்ணன் தலைமையில் பட்டாசு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை நேற்று சந்தித்து, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், தீபாவளி திருநாளை கொண்டாட துணை நிற்போம் என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும். தமிழக அரசு நம்பிக்கை தரும் அறிவிப்பு வெளியிட்டால், தமிழகத்தில் பட்டாசு விற்பனை ஓரளவு இருக்கும் என நம்பிக்கையுள்ளது என நிர்வாகிகள், அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

முதல்-அமைச்சரை சந்தித்து, பட்டாசு உற்பத்தியாளர்கள் நிலை குறித்து எடுத்துக் கூறுவதாகவும், அரசு உரிய உதவிகளை செய்யும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, பட்டாசு ஆலை உரிமையாளர்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள்