மதுரையில் துணிகரம்: 3 ஐம்பொன் சிலைகள் கொள்ளை - மர்ம நபருக்கு வலைவீச்சு
மதுரையில் கோவிலில் புகுந்து 3 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.;
மதுரை,
மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள பேச்சியம்மன் கோவிலானது, 300 ஆண்டுகள் பழமையானது. இந்த கோவில் வைகை அற்றின் தென்கரையில் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சில மாதங்களாக இந்த கோவில் பூட்டப்பட்டு இருந்தது. பூசாரிகள் மட்டும் காலை, மாலையில் பூஜைகள் செய்தனர்.
இந்தநிலையில் காலையில் பூசாரி மோகன் கோவிலை திறக்க வந்துள்ளார். அப்போது கோவில் உண்டியலை உடைக்க முயற்சி நடந்திருப்பதையும், கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த தகவலின் பேரில் திலகர்திடல் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேச்சியம்மன் சன்னதிக்கு பின்னால் அய்யனார் மண்டப கதவு உடைக்கப்பட்டதையும் அறிந்தனர்.
அங்குள்ள மரப்பெட்டியில் இருந்த சுமார் ஒரு அடி உயரம் கொண்ட விநாயகர் சிலை, குதிரையுடன் அய்யனார் சிலை, பொன்னர்சங்கர் சிலை என 3 ஐம்பொன் சிலைகள், குத்துவிளக்கு உள்ளிட்டவை கொள்ளை போனது தெரியவந்தது.
இது தவிர அந்த பெட்டியில் இருந்த உற்சவர் பேச்சியம்மன் உள்ளிட்ட 3 சிலைகள் அப்படியே இருந்தன. மேலும் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் பழனிக்குமார் நேரில் வந்து விசாரணை நடத்தினார். தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
விசாரணையில், இரவில் கோவிலின் பின்புற சுவர் வழியாக ஏறி குதித்து ஒரு வாலிபர் உள்ளே வந்துள்ளார். அவர் சிலை வைக்கப்பட்டிருந்த மண்டபத்தின் கதவை உடைத்தார். பின்னர் அங்கிருந்த சிலைகளை கொள்ளையடித்துவிட்டு வெளியே உள்ள உண்டியலை உடைக்க முயன்றுள்ளார். அப்போது அங்கு கண்காணிப்பு கேமரா இருந்ததை பார்த்து அதை உடைத்து, மின்சாரத்தை துண்டித்துள்ளார்.
அதன்பின்னர் இரவில் 11.30 மணி அளவில் அதே போன்று சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுள்ளார். அவர் செல்லும்போது யானை ஐம்பொன் சிலையை கொண்டு செல்ல முடியவில்லை. எனவே அதனை அந்த பகுதியில் மறைத்து வைத்துச் சென்றது, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளன. அதன் அடிப்படையில்தான் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி, கொள்ளையனை தேடிவருகின்றனர்.
இதுகுறித்து கோவில் பூசாரி செந்தில்வேல் (வயது 57) கூறுகையில், “பழமையான இந்த கோவிலில் கல் சிலைகள், ஐம்பொன்சிலைகள் உள்ளன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மாசி களரி பூஜை மிகவும் சிறப்பு பெற்றது. அந்த திருவிழாவின் போதுதான் உற்சவர் ஐம்பொன் சிலைகளுக்கான வீதி உலா நடைபெறும். கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும். யானை சிலை கனமானது என்பதால், அதனை கோவிலில் பின்புறம் உள்ள ஒரு மறைவான பகுதியில் இருந்ததை மீட்டுள்ளோம்” என்றார்.