நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.6 லட்சம் கிடைக்காததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சி - நித்திரவிளை அருகே பரபரப்பு
நித்திரவிளை அருகே நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த ரூ.6 லட்சம் கிடைக்காததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே எஸ்.டி.மங்காடு தபால்நிலைய சந்திப்பு பகுதியில் ஒரு செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை அங்கு வந்த ஒருவர் திடீரென செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். சத்தம் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் நித்திரவிளை போலீசாருக்கும், கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் தற்கொலை மிரட்டல் விடுத்தவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர் நித்திரவிளை அருகே வாவறை கல்லுவிளை பகுதியை சேர்ந்த தொழிலாளியான புஷ்பராஜ் (வயது 50) என்பதும், மனைவியும், 2 மகன்களும் உள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் புஷ்பராஜின் மனைவி, மகன்களை சம்பவ இடத்துக்கு அழைந்து வந்தனர். அவர்களை கண்டதும் புஷ்பராஜ் தற்கொலை முயற்சியை கைவிடுவதாக கூறினார். அதைதொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்டு கீழே அழைத்து வந்தனர். பின்னர், நித்திரவிளை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவர் கூறியதாவது, ‘நான் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் முதலீடு செய்திருந்தேன். அதை நம்பி உறவினர் மகள் திருமணத்துக்காக வைத்திருந்த பணத்தை அவசர தேவைக்காக கடனாக வாங்கினேன். இதற்கிடையே நிதி நிறுவனம் மூடப்பட்டதால் கடன் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறேன்.
ஊரடங்கால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டதால் மனமுடைந்தேன். இதனால், நிதி நிறுவனத்தில் முதலீடு தொடர்பான விசாரணையை மீண்டும் நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் பணம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டேன்’ என தெரிவித்தார். பின்னர், நித்திரவிளை போலீசார் அவருக்கு அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.