அலங்காநல்லூர் அருகே, வீடு புகுந்து ஆயுதங்களை காட்டி மிரட்டி ரூ.4 லட்சம்- 8 பவுன் நகை கொள்ளை - முகமூடி கொள்ளையர் அட்டகாசம்

அலங்காநல்லூர் அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம், 8 பவுன் நகையை முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திருடிச் சென்று விட்டனர்.

Update: 2020-08-18 21:45 GMT
அலங்காநல்லூர்,

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர்சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 27). தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நள்ளிரவில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர் இவர்களது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை கொன்று விடுவதாக ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை, பணத்தை தினேஷ்குமாரிடம் கேட்டுள்ளனர். மேலும் வீட்டின் பீரோவை திறந்து அதிலிருந்த 8 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அலங்காநல்லூர் போலீசார் கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டு அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.

தடயவியல் நிபுணர்கள் கைரேகை பதிவுகளையும், தடயங்களையும் சேகரித்தனர். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் சம்பவம் நடந்த வீட்டை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தப்பியோடிய முகமூடி கொள்ளை கும்பலை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்