பரமக்குடி அருகே, பயங்கர மோதலில் ஈடுபட முயன்ற கும்பல் கைது - துப்பாக்கி- ஆயுதங்கள் பறிமுதல்
அபிராமம் அருகே பயங்கர மோதலில் ஈடுபட இருந்த இரு தரப்பினரை விரட்டி பிடித்த போலீசார் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை கைப்பற்றி 6 பேரை கைது செய்தனர்.
பரமக்குடி,
பரமக்குடி அருகே நல்லூரைச் சேர்ந்தவர் மூவேந்திரன். இவர் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கும் சென்னை கொடுங்கரையில் வசித்து வரும் அபிராமம் அருகே உள்ள மணலூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்து வருகிறது.
இந்த நிலையில் செந்தில் மற்றும் மூவேந்திரன் தரப்பினர் மோதலில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அறிந்த அபிராமம் போலீசார் மோதல் நடைபெற இருந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் இரு தரப்பினரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
உடனே போலீசார் மூவேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் 1.300 கிராம் கஞ்சா, 1 வாள், 3 அரிவாள், ஒரு கார் ஆகியவற்றை கைப்பற்றினர். அதே போல செந்திலிடம் இருந்து ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்துஅவரையும் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 6 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு பின்னர் போலீசார் அழைத்துச்சென்று கமுதி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கில் தலைமறைவாகி போலீசாரால் தேடப்பட்டு வந்த பரமக்குடியைச் சேர்ந்த நாகேந்திர சேதுபதிக்கு ராமநாதபுரம் கோர்ட்டு பிடிவாரண்ட் பிரப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பரமக்குடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு பரமக்குடி அருகே பொதுவக்குடி கிராமத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு தேடி போலீசார் சென்றனர். அங்கு அவர் இல்லை. உள்ளே சென்று சோதனை செய்ததில் அங்கிருந்து கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நாகேந்திரசேதுபதியை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.