புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சானிடைசர், முக கவசம் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் - கல்வி அதிகாரிகள் பாராட்டு

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர் களுக்கு சானிடைசர், முக கவசம் வழங்கிய அரசு பள்ளி தலைமை ஆசிரியரை கல்வி அதிகாரிகள் பாராட்டி னர்.

Update: 2020-08-18 21:45 GMT
கோட்டூர், 

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 17-ந் தேதி முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கொரோனா தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டு வேலை வாய்ப்புகள் குறைந் துள்ள நிலையில், பொருளாதார நிலையும் மந்தமாகவே உள்ளது.

இதனால் வேன் அல்லது பஸ்களில் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி வைத்த பெற்றோர், கொரோனா நோய் தொற்றின் பயம் காரணமாக அருகாமையில் உள்ள அரசு பள்ளிகளில் தமது குழந்தைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள கண்டகிரயம் எக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த செவ்வாய்க் கிழமை புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கபாபு வழங்கியதுடன், கொரோனா தொற்றில் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதுகுறித்து ,பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கபாபுவிடம் கேட்டபோது, முன்பெல்லாம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிக்கு சேர்க்க வரும் பெற்றோர் மஞ்சள் பையில் ஆசிரியர்களுக்கு குளிர்பானங்களும், மாணவர்களுக்கு வழங்க மிட்டாய்களும் வாங்கி வந்து தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்த்து மகிழ்வர். இந்த கொரோனா தொற்று காலம் அவர்களின் பொருளாதார நிலையை முடக்கி விட்டது.

நெடுந்தொலைவில் தனியார் பள்ளியில் படித்த தங்கள் குழந்தைகளின் நலன் கருதி அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வமுடன் வருகின்றனர். கொரோனா தொற்றில் அலட்சியம் கூடாது. மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனும் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் விதமாக புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

மாணவர் சேர்க்கை பணியில் பள்ளி மேலாண்மைக் குழு தலைவி முத்துலெட்சுமி, உறுப்பினர்கள் சந்திரா, அங்கையர்கன்னி, பாலு, சண்முகம், ஜமுனாராணி, சரண்யா, நூலகர் பிரேமா ஆகியோர் பங்கேற்றனர்.

புதிதாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு சானிடைசர் மற்றும் முக கவசம் வழங்கி கொரோனா தொற்று பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கண்டகிரயம் எக்கல் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கோட்டூர் வட்டார கல்வி அலுவலர்கள் சிவக்குமார், குமரேசன் ஆகியோர் வெகுவாகப் பாராட்டினர்.

மேலும் செய்திகள்