விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க அனுமதி: குமரியில் முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் - வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம்

விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் வழங்க அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து குமரியில் முதல் நாளில் 2 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகம் ஆகும்.

Update: 2020-08-18 06:29 GMT
நாகர்கோவில், 

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு கடந்த மார்ச் மாதத்தில் இருந்து ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு செல்வதற்கும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவதற்கும் இ-பாஸ் பெற்றுத்தான் செல்ல வேண்டும் என்ற நடைமுறையை அமல்படுத்தி உள்ளது.

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை, திருமணம், இறப்பு போன்ற முக்கியமான நிகழ்வுகள், பணிகள் போன்றவற்றுக்கு செல்பவர்கள் சரியான ஆவணங்களை இணைத்திருந்தால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதனால் விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்காத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் அனைவருக்கும் எளிதாக இ-பாஸ் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து வந்தது. இதை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மக்கள் இ-பாஸ் பெறுவதற்கு தளர்வுகள் அளித்து உத்தரவிட்டது. அதில் இம்மாதம் 17-ந் தேதி (அதாவது நேற்று) முதல் இ-பாஸ் கோரி ரேஷன் கார்டு அல்லது ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிப்பவர்கள் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று கூறியிருந்தது.

இந்த தளர்வுடன் கூடிய நடைமுறை நேற்று முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமலுக்கு வந்தது. குமரி மாவட்டத்திலும் இது நடைமுறைக்கு வந்தது.

இதனால் நேற்று விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் உடனுக்குடன் இ-பாஸ் கிடைத்தது. நேற்று ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இ-பாஸ் பெற்றிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது வழக்கத்தை விட 3 மடங்கு அதிகமாக இருந்தது.

அதே நேரத்தில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து குமரிக்கு வருபவர்களுக்கு பழைய நடைமுறையே தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களது ஆன்லைன் விண்ணப்பங்களை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு தான் அனுமதி அளிப்பார்கள்.

இவ்வாறு வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பித்தவர்கள் நேற்று 200 பேர் இ-பாஸ் கோரி விண்ணப்பித்திருந்தனர். இ-பாஸ் நடைமுறை தளர்வால் நேற்று ஏராளமான வாகனங்கள் குமரிக்கு வந்தன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடியில் அணிவகுத்தபடி நின்றதை காண முடிந்தது. இ-பாஸ் தளர்வால் குமரிக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

மேலும் செய்திகள்