நெமிலி அருகே, ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
நெமிலி அருகே ரேஷன்கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.;
நெமிலி,
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த அசநெல்லிக்குப்பம் கிராமத்தில் 600-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
தற்போது பரவி வரும் கொரோனா தொற்றால் பொதுமக்கள் தினமும் வேலைக்குச் செல்ல முடியாத சூழ்நிலையில் உள்ளனர். மத்திய, மாநில அரசுகள் சார்பில் கூடுதலாக ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
அசநெல்லிக்குப்பம் ரேஷன் கடை விற்பனையாளர் பொதுமக்களுக்கு வழங்கும் ரேஷன் அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவதாகவும், பொதுமக்களுக்கு முறையாக வழங்குவதில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. வழங்கும் அரிசி தரம் இல்லாமல் இருந்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர்.
விற்பனையாளரின் முறைகேடுகளை தடுக்கவும், தரமான அரிசி வழங்க வேண்டும் எனக் கோரி ரேஷன் கடையை பொதுமக்கள் சூழ்ந்து முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விற்பனையாளர் ரேஷன் கடையை மூடி விட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார்.
தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ரேஷன் கடை விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், எனத் தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.