அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு செல்போன் வழங்கிய தலைமை ஆசிரியர்
அரசு பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் செல்போன் வழங்கினார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக 2020-2021-ம் கல்வியாண்டில் முதல் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை சேரும் அனைத்து மாணவ-மாணவிகளும் இணைய வழி கல்வியை எளிதாக தொடர வசதியாக தலைமை ஆசிரியர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
தமிழக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடங்கியது. பஸ் வசதியில்லாத இக்கிராமத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியை பணிபுரிந்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் அச்சத்தால் பள்ளிகள் மூடப்பட்டுள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடங்களை தமிழக அரசு இணையதளம் மற்றும் தொலைக்காட்சி மூலம் நடத்தி வருகிறது.
இந்த கிராமத்தில் அனைவரும் கூலி வேலை செய்து வருபவர்கள். இவர்களுக்கு செல்போன் என்பது கனவாகவே இருந்து வந்த சூழ்நிலையில், தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முதல் வகுப்பு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் செல்போன் வாங்கித் தர முடிவு செய்தார். இதன்படி மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளில் பள்ளியில் சேர்ந்த 4 மாணவ- மாணவிகளுக்கு செல்போன் வழங்கப்பட்டது.
இது குறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், “இந்த பள்ளியில் எந்த வகுப்பிற்கு புதிதாக மாணவர்கள் வந்தாலும் அவர்களுக்கு செல்போன் விலையில்லாமல் வழங்கப்படும். மேலும் 2 கி.மீ. தூரத்தில் உள்ள அண்ணாநகரில் இருந்து படிக்க வரும் மாணவ- மாணவிகள் வந்து செல்ல சொந்த செலவில் ஆட்டோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.