மாவட்டத்தில், கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி - புதிதாக 28 பேர் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார். புதிதாக 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர் உயிரிழந்தும் உள்ளனர். நேற்று கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகியுள்ளார். அவர் வெங்கமேட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஆவார். சில நாட்களாக கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மூலிமங்களத்தை சேர்ந்த 55 வயது ஆண், ராமேசுவரபட்டியை சேர்ந்த 37 வயது பெண், வெங்கமேட்டை சேர்ந்த 60 வயது முதியவர், 41 வயது பெண், குளித்தலையை சேர்ந்த 48 வயது ஆண், 50 வயது ஆண், கணேஷ்நகரை சேர்ந்த 72 வயது ஆண், கங்காநகரை சேர்ந்த 58 வயது ஆண், திருக்காம்புலியூரை சேர்ந்த 68 வயது ஆண், பசுபதிபாளையத்தை சேர்ந்த 25 வயது பெண், ஜவகர்பஜாரை சேர்ந்த 80 வயது மூதாட்டி, காந்தி கிராமத்தை சேர்ந்த 55 வயது பெண், மண்மங்கலத்தை சேர்ந்த 30 வயது பெண் உள்பட 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.