கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-08-17 22:15 GMT
பெரம்பலூர்,

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், பாலக்கரை டாஸ்மாக் கடை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க.வின் பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். இணை செயலாளர்கள் கனகராஜ், கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட கவுன்சில் செயலாளர் ரெங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், கொரோனா காலத்தில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு வெளியிடப்பட்ட அரசாணை எண் 280-ஐ தமிழக அரசு அமல்படுத்த வேண்டும். கொரோனாவால் உயிரிழந்த டாஸ்மாக் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கும் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி, வாரிசு வேலை வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முடிவில் பொருளாளர் கிருஷ்ணராஜ் நன்றி கூறினார். இதையடுத்து டாஸ்மாக் பணியாளர்கள், கோரிக்கைகள் தொடர்பான மனுவை பெரம்பலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளரிடம் வழங்கினர். இதேபோல் வருகிற 21-ந் தேதி வரை தினமும் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மேலனிக்குழி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பில் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில துணை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். இதில் விற்பனையாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சாதிக் பாட்சா, டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அருங்கால் கல்லக்குடி கிராமத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடை முன்பு தமிழ்நாடு மாநில டாஸ்மாக் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட கவுன்சில் செயலாளர் சட்டநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்