சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: 3 திருநங்கைகள் தீக்குளிக்க முயற்சி
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 3 திருநங்கைகள் தீக்குளிக்க முயன்றதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வேறு சில திருநங்கைகள் பணம் கேட்டு மிரட்டுவதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
சேலம்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் ராமன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறுவதற்கு வசதியாக கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கை மனுக்களை போட்டுவிட்டு செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த திருநங்கைகள் 3 பேர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றியவாறு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டவாறு அங்கும், இங்குமாக ஓடினர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் மற்றும் போலீசார் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டில்களை பறித்ததுடன், அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். இதையடுத்து திருநங்கைகள் மீது தண்ணீர் ஊற்றப்பட்டது. இதனிடையே கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் சிறிது நேரம் பூட்டப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேலம் மெய்யனூரை சேர்ந்த நிரஞ்சனா(வயது 24), பிரகதி(23), ரம்யா(33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
போலீசாரிடம் திருநங்கைகள் கூறியதாவது:-
நாங்கள் 3 பேரும் மெய்யனூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். எங்களிடம், வேறு திருநங்கைகள் சிலர் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டுகின்றனர். இந்த பணத்தை கொடுப்பதற்காக எங்களை பாலியல் தொழிலுக்கு செல்லுமாறு வற்புறுத்துகின்றனர்.
மேலும் அடியாட்களை ஏவியும் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே அவர்களால் எங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதால் மனவேதனை அடைந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் 3 திருநங்கைகள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பொதுமக்கள் மனுக்கள் போடும் பெட்டி கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு வெளிப்பகுதியில் வைக்கப்பட்டது.