பிரபல சினிமா இயக்குனர் நிஷிகாந்த் காமத் மரணம் - திரைப்பட துறையினர் இரங்கல்

பிரபல சினிமா இயக்குனர் நிஷிகாந்த் காமத் நேற்று உயிரிழந்தார். அவருக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.;

Update: 2020-08-18 00:08 GMT
மும்பை,

தமிழில் மாதவன், சங்கீதா நடிப்பில் வெளியான “எவனோ ஒருவன்” படத்தை இயக்கியவர் நிஷிகாந்த் காமத். நடிகர் அஜய் தேவ்கன், நடிகை தபு நடிப்பில் இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற “திரிஷ்யம்” படத்தை இயக்கி இவர் பிரபலம் ஆனார். இது மலையாள படத்தின் ரீமேக் ஆகும். தமிழில் கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படமாகவும் வெளியானது. 50 வயதான நிஷிகாந்த் காமத் கல்லீரல் நோயால் கடந்த 2 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக கடந்த மாதம் 31-ந் தேதி ஐதராபாத்தில் உள்ள ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் திடீரென அவரது கல்லீரல் செயல் இழந்தது. இதையடுத்து அவரது மற்ற உடல் உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கியது. இதன்காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை 4.24 மணி அளவில் உயிரிழந்தார்.

நிஷிகாந்த் காமத் “திரிஷ்யம்” மட்டுமின்றி “போர்ஸ்” என்ற அதிரடி படத்தையும், இர்பான் கான் நடித்த “மதாரி” படத்தையும் இயக்கியவர்.

இவரது மரணத்துக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் அஜய் தேவ்கன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “நிஷிகாந்த் காமத் எப்போதும் மலர்ந்த புன்னகை தவழும் முகத்துடன், பிரகாசமாக காட்சி அளிக்கக்கூடியவர். அவர் சீக்கிரத்திலேயே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்” என கூறியிருந்தார்.

இயக்குனர் ஹன்சுல் மேத்தா வெளியிட்ட பதிவில் “அவர் நம்மை விட்டு சென்றுவிட்டார். இந்த ஆண்டு முடிவில்லாத ஒரு கனவு போல தோன்றுகிறது. நீ என்னுடன் இல்லாததை எப்போதும் உணர்வேன் நண்பா” என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்