கேசவன்புத்தன்துறையில் கடல் சீற்றம்: கடலரிப்பால் கரையோர வீடுகள் இடியும் அபாயம்

கேசவன்புத்தன்துறையில் தொடர்ந்து ஏற்படும் கடல் சீற்றத்தால் கடலரிப்பு ஏற்பட்டு கரையோர வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் அதிகாரிகளிடம் வலியுறுத்தினர்.

Update: 2020-08-17 06:30 GMT
ஈத்தாமொழி, 

ஈத்தாமொழி அருகே கேசவன்புத்தன்துறை கடற்கரை கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனால், கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு சுவர் கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. தற்போது, கடலரிப்பு ஏற்பட்டு உயரமான கரைபகுதி இடிந்து விழுந்து கடல் ஊருக்குள் விரிவடைந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேசவன்புத்தன்துறை பகுதியை பார்வையிட்டு ரூ.1¼ கோடியில் 320 மீட்டர் நீளத்திற்கு தடுப்பு சுவர் கட்ட மதிப்பீடு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் கேசவன்புத்தன்துறை பகுதியில் பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. கடலில் ராட்சத அலைகள் எழுந்து கரையில் வந்து மோதிய வண்ணம் இருந்தது. இதனால், கடுமையான கடலரிப்பு ஏற்பட்டு கரையோரம் நின்ற தென்னை மரங்கள் சாய்ந்து அலையில் இழுத்து செல்லப்பட்டன. மேலும், கரையோரம் உள்ள பல வீடுகள் இடியும் அபாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராஜன், துணை தாசில்தார் கந்தசாமி, ராஜாக்கமங்கலம் வருவாய் ஆய்வாளர் பென்சிலின் ஷீபா, தர்மபுரம் கிராம நிர்வாக அதிகாரி லட்சுமி, ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் அஜ்மல் ஜெனிப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவர்களிடம் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் கெபின்சா, பங்குதந்தை ஜெகன், ஒன்றிய கவுன்சிலர் மேரி தமிழரசி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, பொதுமக்கள் தரப்பில் கூறும் போது, கடலரிப்பு ஏற்பட்டு கரையோரம் உள்ள சுமார் 70 வீடுகள் இடியும் அபாயத்தில் உள்ளது. எனவே இந்த பகுதியில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு பதிலாக வலுவான தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

இந்த கோரிக்கை தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது உடனடி நிவாரணமாக பாதிப்புக்குள்ளான பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள சமூக நலக்கூடத்தில் தங்குமாறு அதிகாரிகள் கூறினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்