கடலூர் மாவட்டத்தில், ஊராட்சி மன்ற தலைவி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலி - சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 185 பேருக்கு தொற்று உறுதி

கடலூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவி உள்பட 2 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 185 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.;

Update: 2020-08-16 22:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 6,506 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் 3,716 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 79 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 185 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

இவர்களில் சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர் ஒருவர், கடலூர் பகுதியை சேர்ந்த 3 செவிலியர்கள், புவனகிரி, கடலூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 7 போலீஸ்காரர்கள், அண்ணாகிராமம், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்கள் 2 பேர், சென்னை, நாகப்பட்டினம், சவுதி அரேபியா ஆகிய பகுதியில் இருந்து கடலூர் மாவட்டம் வந்த 3 பேர், கர்ப்பிணிகள் 4 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுதவிர அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி 2 பேர், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த சிறைக்கைதி ஒருவர், சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 63 பேருக்கும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 98 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,691 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் நேற்று 2 பேர் பலியாகி உள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:-

புதுப்பேட்டை அருகே உள்ள மணம்தவிழ்ந்தபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக இருந்தவர் நரசிம்மன் மனைவி சரண்யா (வயது 65). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை உறவினர்கள் சிகிச்சைக்காக புதுச்சேரி காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சரண்யா, பரிதாபமாக இறந்தார். பின்னர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உதவியுடன், சரண்யாவின் உடல் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

இதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வேப்பூரை சேர்ந்த 68 வயது முதியவர், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். நேற்று மட்டும் 157 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். மேலும் 2,617 பேருடைய உமிழ்நீர் பரிசோதனை முடிவு வரவேண்டியுள்ளது.

மேலும் செய்திகள்