வேலூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 200 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 8,460 ஆக உயர்ந்தது

வியாபாரிகள், டாக்டர்கள் உள்பட 200 பேர் ஒரேநாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். வேலூர் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8,460 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-17 02:31 GMT
வேலூர், 

வேலூர் மெயின் பஜார், சுண்ணாம்புகார தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடை வியாபாரிகள், ஊழியர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில், வியாபாரிகள், ஊழியர்கள் 5-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அங்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, கடைகள் மூடப்பட்டன. வியாபாரிகள், ஊழியர்களின் குடும்பத்தினர், கடையில் பணிபுரிந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

வேலூர் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பணிபுரிந்த நர்சுக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அவரின் சளிமாதிரி பரிசோதனையில் கொரோனா உறுதியானது. இதேபோன்று பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய ஊழியருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

8,460 பேருக்கு தொற்று உறுதி

வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர், நர்சுகள், ஊழியர்கள் உள்பட 16 பேருக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் வேலூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த 6 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அதைத்தவிர வேலூர் பூந்தோட்டத்தில் ஒருவயது பெண்குழந்தை, தோட்டப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 5 பேர், பொன்னியம்மன்நகரில் 7 வயது ஆண்குழந்தை, கொணவட்டம், அரிமுத்துமோட்டூரில் தலா ஒரு 10 வயது ஆண்குழந்தை, வேலூர் காந்திநகரில் 84 மூதாட்டி, ஊசூரில் 75 வயது முதியவர், மாநகராட்சி பகுதியில் 121 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 200 பேர் ஒரேநாளில் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் இதுவரை 8,460 பேர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 7,214 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், திமிரி பகுதிகளை சேர்ந்த மொத்தம் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8377 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,335 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 2,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.சாமிக்கண்ணு என்பவர் கொரோனா தொற்றுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் மீண்டும் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து நேற்று அவரை மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்