முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைப்பு: பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் சாலைகள் வெறிச்சோடின
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டதாலும், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதாலும் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.;
நாமக்கல்,
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மருத்துவமனைகள், மருந்து கடைகள், ஆவின் பாலகம் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
இதேபோல் லாரி, கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாததால் நகர் முழுவதும் அமைதி நிலவியது. முழு ஊரடங்கை யொட்டி நேற்று உழவர்சந்தைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியதால், சாலைகள் வெறிச்சோடி இருந்தன. நாமக்கல் நகரை பொறுத்த வரையில் கடைவீதி, மெயின்ரோடு, திருச்சி சாலை, மோகனூர் சாலை, சேலம் சாலை, திருச்செங்கோடு சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நாமக்கல் பஸ்நிலையம் அருகே இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். மற்ற நபர்களையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் விளையாடிய சிறுவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பினர். சில இடங்களில் விளையாட்டு உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் என மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடி இருந்தன.