சூளகிரி அருகே, காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் பலி - உடலுடன், பொதுமக்கள் சாலை மறியல்
சூளகிரி அருகே காட்டு யானை தாக்கி 2 விவசாயிகள் பலியானார்கள். இதை கண்டித்து இறந்தவரின் உடலுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே புலியரசி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 28). ஜோகீர்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). 2 பேரும் விவசாயிகள். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஏ.செட்டிப்பள்ளியில் உள்ளது. நேற்று காலை அவர்கள் 2 பேரும் தங்களின் விவசாய நிலத்திற்கு நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் புதர் மறைவில் இருந்து ஒரு காட்டு யானை 2 பேரை நோக்கி வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் தப்பி ஓட முயன்றனர். இருப்பினும் அந்த யானை விரட்டி சென்று 2 பேரையும் துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் முனிராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர். அவர்கள் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
யானை தாக்கி 2 பேர் பலியான தகவல் அறிந்து அவர்களின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் இறந்து போன முனிராஜின் உடலை சூளகிரி-பேரிகை சாலையில் ஜோகீர்பாளையம் என்னும் இடத்தில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் முருகன் எம்.எல்.ஏ., சூளகிரி தாசில்தார் பூவிதன், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, மற்றும் அதிகாரிகள், போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
ஆனாலும் அவர்கள் கலெக்டர் வரும் வரையில் உடலை எடுக்க விடமாட்டோம். மேலும் ஒற்றை யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து யானையை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதைத் தொடர்ந்து முனிராஜின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். யானை தாக்கி இறந்த முனிராஜ், ராஜேந்திரன் ஆகிய 2 பேரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் முதல் கட்டமாக தலா ரூ.50 ஆயிரத்திற்கான நிதியை முருகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
இறந்து போன முனிராஜிக்கு திருமணமாகி சரோஜா என்ற மனைவி உள்ளார். அதேபோல ராஜேந்திரனுக்கு சிவகாமி என்ற மனைவியும், சதீஸ் என்ற மகனும், ராஜேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் சூளகிரி அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து முருகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், சூளகிரி அருகே யானை தாக்கி 2 பேர் இறந்துள்ளனர். கடந்த ஒரு மாத காலமாக இந்த யானை இப்பகுதியில் சுற்றித்திரிகிறது. அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று தொடர்ந்து வனத்துறைக்கு கோரிக்கை வைத்து வருகிறேன். சூளகிரி தாலுகாவில் இந்த ஆண்டு மட்டும் யானை தாக்கி 11 பேர் இறந்துள்ளனர். பல நூறு ஏக்கர் விவசாய பயிர்களை யானைகள் நாசம் செய்துள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக யானைகளால் பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. யானை தாக்கி பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தில் தகுதிக்கு ஏற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று அவர் கூறினார்.