மாவட்டத்தில், மது விற்ற 11 பேர் கைது 1,000 மது பாட்டில்கள் பறிமுதல் - தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்டத்தில் மது விற்ற 11 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1,000 மது பாட்டில்கள் மற்றும் ரூ.17 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன.;
புதுக்கோட்டை,
சுதந்திர தின விழாவையொட்டி நேற்று முன்தினமும், முழு ஊரடங்கையொட்டி நேற்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுப்பாட்டில்களை மொத்தமாக வாங்கி வைத்து சட்டவிரோதமாக விற்கும் நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த தனிப்படை போலீசார் நேற்று மாவட்டத்தில் ஆங்காங்கே அதிரடியாக சோதனை நடத்தினர். அறந்தாங்கி பகுதியில் வெவ்வேறு இடங்களில் மது விற்ற துரைமாணிக்கம் (வயது 45), ஈச்சங்குடி உடையார் கோவில் பகுதியை சேர்நத சத்யராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். இதேபோல ஆவுடையார்கோவில் பகுதியில் மது விற்ற ராஜமாணிக்கத்தை (50) கைது செய்தனர்.
அன்னவாசல் பகுதியில் ஒரு இடத்தில் மதுபாட்டில்களை பெட்டி, பெட்டியாக பதுக்கி வைத்து விற்ற குளத்தூரை சேர்ந்த அழகர் (60), மாங்குடியை சேர்ந்த தங்கராஜ் (39) ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 822 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல திருமயம், ஏம்பல் பகுதியில் மது விற்ற அழகுசுந்தரம்(50), பெரியய்யா (60) ஆகியோர் சிக்கினர். மேற்கண்ட சம்பவத்தில் கைதான 7 பேரிடம் இருந்து மொத்தம் 908 மது பாட்டில்களும், ரூ.16 ஆயிரத்து 960 கைப்பற்றப்பட்டன.
கறம்பக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கறம்பக்குடி சீனீக்கடை முக்கம் பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த செந்தில்குமார் (40), தளபதி (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல, மாத்தூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது ஆவூர் அருகே உள்ள காட்டுப்பகுதியில் மது விற்ற செங்களாக்குடியை சேர்ந்த சின்னராசு (32), மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே மறைவான இடத்தில் வைத்து பிடாம்பட்டி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.