பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு
பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
அரியலூர்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் தற்போது 7-ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் கடந்த மாதம் போல, இந்த மாதம் முழுவதும் உள்ள ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி இந்த மாதத்தின் 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை முழுமையான ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதையொட்டி முழு ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்பட்ட பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள், அம்மா உணவகங்கள் ஆகியவற்றை தவிர மற்ற அனைத்தும் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் நேற்று ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
ஆனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தும் பெரம்பலூர் நகர் பகுதிகளில் சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகவே காணப்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், அவர்களை நிறுத்தி, என்ன காரணத்திற்காக வெளியில் சுற்றி திரிகிறீர்கள் என்று வாகன ஓட்டிகளிடம் கேட்டனர். இதில் மருத்துவம், இறப்பு, திருமணம் உள்ளிட்ட காரணத்திற்காக சென்றவர்களை அறிவுரை கூறி வழியனுப்பி வைத்தனர். மற்றவர்களுக்கு போலீசார் கொரோனா வைரசின் தாக்கம் குறித்து எடுத்துக்கூறி, அபராதம் விதித்தனர். பெரம்பலூர் நகர் பகுதிகளில் ஒரு சில சாலைகள் நான்கு சக்கர வாகனங்கள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு சில கிராமங்களில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி இறைச்சி கடைகள், காய்கறி, மளிகை கடைகள் திறக்கப்பட்டிருந்தன. மேலும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் போலீசார் சோதனை பணியிலும் மற்றும் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.