திருவாரூர் மாவட்டத்தில், முழு ஊரடங்கை மீறிய 400 பேர் மீது வழக்கு - 50 வாகனங்கள் பறிமுதல்

திருவாரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறிய 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-08-16 21:45 GMT
திருவாரூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று 3-வது வார முழு ஊரடங்கையொட்டி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

திருவாரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடைவீதி பகுதியில் காய்கறி, மளிகை, ஜவுளி, நகை மற்றும் இரும்பு கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டமின்றி சாலை வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், ஆட்டோ போன்ற வாகனங்கள் ஓடாததால் நேதாஜி சாலை, பனகல் சாலை, தெற்கு வீதி போன்ற பகுதிகளும் வெறிச்சோடி கிடந்தது.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெட்ரோல் பங்குகள், இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய தேவையான பால், மருந்து கடைகள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டிருந்தன.

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்்தரவின்படி மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 60 இடங்களில் வாகன சோதனை நடந்தது. இதில் ஊரடங்கை மீறியதாக 400 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது முழு ஊரடங்கை மீறி பலர் மோட்டார் சைக்கிள்களில் வலம் வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர், ‘கொரோனா நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

ஊரடங்கு முழுமையாக விலக வேண்டும் என்றால், தற்போது உள்ள விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்’ என அறிவுறுத்தினார்.

மேலும் செய்திகள்