தஞ்சை வங்கியில் தீ விபத்து ஆவணங்கள் எரிந்து நாசம்; நகை- பணம் தப்பியது
தஞ்சையில் உள்ள ஒரு வங்கியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து நாசமானது. பணம், நகைகள் தப்பின.;
தஞ்சாவூர்,
தஞ்சை காந்திஜி சாலையில் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியின் முன் பகுதியில் ஒரு பகுதியில் ஏ.டி.எம் மையமும், மற்றொரு பகுதியில் வங்கிக்குள் செல்லும் வாசலும் உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், வங்கி இரு நாட்களாக பூட்டிக்கிடக்கிறது. இந்த வங்கியில் நேற்று இரவு 8 மணி அளவில் புகை வெளியே வந்தது. இதனைப்பார்த்த அங்கிருந்த காவலாளி உடனடியாக தஞ்சை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் மாவட்ட அலுவலர் மனோபிரசன்னா, உதவி அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் நிலைய அலுவலர் திலகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ஆனால் வங்கி பூட்டப்பட்டு இருந்ததால் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்து பார்த்தனர்.
அப்போது வங்கியின் காசாளர் அறையில் இருந்து தீ எரிந்து கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதனை ஜன்னல் வழியாக அணைக்க முயன்றனர். ஆனால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து முன்பக்க கதவை தீயணைப்பு வீரர்கள் உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தீயை அணைத்தனர்.
காசாளர் அறையில் இருந்த ஏ.சி. மெஷினில் இருந்து மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஏ.சி. மெஷின், கணினி, பணம் எண்ணும் இயந்திரம், மின் விசிறி, மரத் தடுப்பு ஆகியவை எரிந்து நாசமாயின. மேலும் சில ஆவணங்களும் எரிந்து நாசமாயின.இதையடுத்து வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் சம்பவ இடத்திற்கு வந்து இதர ஆவணங்களை அங்கிருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்றனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் வங்கியில் இருந்த பணம், நகைகள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து குறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீ விபத்து குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் மனோபிரசன்னா கூறுகையில், “வங்கியில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது. இதில் ஏ.சிமெஷின், மின்விசிறி, சில ஆவணங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாயின. சேத விவரம் குறித்து போலீசார் விசாரணையில் தெரியவரும்”என்றார்.