நெருப்பெரிச்சலில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவு அலுவலகத்தில் குவியும் பொதுமக்கள் - சமூக இடைவெளி கேள்விக்குறியானது

நெருப்பெரிச்சலில் ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் மக்கள் அதிகம் கூடுவதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2020-08-16 05:45 GMT
திருப்பூர்,

திருப்பூர் நெருப்பெரிச்சலில் புதிதாக ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம், இணை சார்பதிவாளர் அலுவலகம்-1 மற்றும் 2 ஆகிய 4 அலுவலகங்கள் தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் செயல்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு இணை சார்பதிவாளர் அலுவலகம்-1 பெரியார் காலனியிலும், தொட்டிப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகம் சாந்தி தியேட்டர் அருகிலும், மாவட்ட பதிவாளர் அலுவலகம், இணை சார்பதிவாளர் அலுவலகம்-2 ஆகியவை சிவன் தியேட்டர் அருகிலும் செயல்பட்டு வந்தது.

தற்போது 4 அலுவலகங்களும் ஒரே கட்டிடத்தில் இருப்பதால் பத்திரப்பதிவுக்கு அதிக அளவில் மக்கள் இங்கு கூடுகிறார்கள். நாளொன்றுக்கு இங்கு சராசரியாக 150 பத்திரப்பதிவு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஒரு பத்திரப்பதிவுக்கு குறைந்தபட்சம் 4 பேர் அனுமதிக்கப்பட்டாலும் 600-க்கும் மேற்பட்டவர்கள் இந்த அலுவலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா வேகமாக பரவி வரும் இந்த கால சூழ்நிலையில் இந்த ஒரே கட்டிடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வது சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுவும் முகூர்த்த நாட்கள் உள்ளிட்ட முக்கிய நாட்களில் அதிக அளவு பத்திரப்பதிவு நடக்கும்போது 1,000 பேர் வரை இங்கு வருவதாக தெரிவிக்கிறார்கள்.

இந்த கட்டிடத்துக்கு முன்பு பந்தல் உள்ளிட்ட எந்தவித வசதியும் இல்லை. இதனால் அருகில் உள்ள கட்டிடங்களில் நிழலுக்கு மக்கள் ஒதுங்கி நிற்கிறார்கள். இதன்காரணமாக நெருக்கமாக இருப்பதால் சமூக இடைவெளியை பின்பற்றுவதில் கடும் சிரமம் நிலவி வருகிறது. அதுபோல் பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் அலுவலகங்களுக்குள் செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வட்டம் வரையப்பட்டு இருந்தாலும் நுழைவுவாசல் பகுதியில் மக்கள் அதிக அளவில் நிற்கிறார்கள்.

கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த அலுவலக கட்டிடத்தின் முன்பு 2 இடங்களில் பந்தல் அமைக்கப்படுகிறது. அங்கு சமூக இடைவெளியுடன் இருக்கைகள் அமைக்க வசதி செய்யப்பட்டு வருகிறது. பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் இந்த பந்தல்களில் அமர வைக்கப்படுவார்கள். அங்கு ஒலி பெருக்கி வசதி செய்யப்பட்டு பத்திரப்பதிவு டோக்கன் எண் அறிவிக்கப்பட்டதும் சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் அலுவலகத்துக்குள் வந்து செல்லும் வகையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்