ஈரோடு-பெருந்துறை பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - புதிதாக 15 பேருக்கு தொற்று

ஈரோடு மற்றும் பெருந்துறை பகுதியில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-08-15 22:00 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வந்தது. புதிய உச்சமாக நேற்று முன்தினம் மாவட்டத்தில் 128 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியது. இந்த நிலையில் நேற்று கொரோனா வைரசின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று புதிதாக 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் வரை ஈரோடு மாவட்ட பட்டியலில் 1,334 பேர் இருந்த நிலையில் இந்த எண்ணிக்கை நேற்று 1,349 ஆக உயர்ந்தது. மேலும் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, ஈரோடு பெருந்துறை பகுதியை சேர்ந்த 53 வயது ஆணும், ஈரோடு கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 90 வயது முதியவரும் நேற்று கொரோனா வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

புதிதாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் 10 பேரும், சித்தோடு பகுதியில் 3 பேரும், கோபி மற்றும் பெருந்துறை பகுதிகளில் தலா ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த 23 வயது வாலிபருக்கும், பெரியசேமூர் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கும், வீரப்பன்சத்திரம் சாஸ்திரி நகர் பகுதியை சேர்ந்த 42 வயது ஆணுக்கும், அசோகபுரம் பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கும், கொல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது இளைஞருக்கும், சூரம்பட்டி நால்ரோடு பகுதியை சேர்ந்த 50 வயது ஆணுக்கும், சூரம்பட்டி வலசு பகுதியை சேர்ந்த 65 வயது மூதாட்டிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

மேலும் ஈரோடு பெருந்துறை ரோடு பகுதியை சேர்ந்த 54 வயது ஆணுக்கும், எஸ்.கே.சி. ரோடு பகுதியை சேர்ந்த 27 வயது இளம்பெண்ணுக்கும், கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 63 வயது முதியவருக்கும், பெருந்துறை சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த 53 வயது ஆணுக்கும், சித்தோடு செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்த 42 வயது ஆணுக்கும், சித்தோடு எலவமலை பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபருக்கும், வசுவபட்டி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், கோபிசெட்டிபாளையம் பச்சமலை பகுதியை சேர்ந்த 50 வயது பெண்ணுக்கும் என மொத்தம் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

இதில் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 4 பேருக்கும், தொடர்பில்லாமல் 11 பேருக்கும் கொரோனா தொற்று பரவி உள்ளது. அதே நேரம் நேற்று ஒரே நாளில் 54 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1,349 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 853 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது 476 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்