கடலூரில், ரூ.1½ கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல்: மளிகைக்கடைக்காரர் உள்பட 3 பேர் கைது - தலைமறைவான மேலும் 3 பேருக்கு வலைவீச்சு

கடலூரில், ரூ.1½ கோடி புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் மளிகைக்கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2020-08-16 02:35 GMT
கடலூர், 

கடலூர் கே.என்.பேட்டை திருப்பதி நகரில் உள்ள ஒரு வீட்டில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள் 8 டன் அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1½ கோடி ஆகும். இதை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை உணவு பாதுகாப்பு துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீட்டை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போடிச்செட்டி தெருவில் மளிகை கடை வைத்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி மகன் பாரதி (வயது 36) என்பவர் வாடகைக்கு எடுத்து, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பாக்குகளை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும், வினியோகஸ்தராக திருப்பாதிரிப்புலியூர் பிடாரிஅம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணன் (49), உடந்தையாக சாவடி ரட்சகர் நகர் கேசவன் மகன் ராம்குமார் (19), கே.என்.பேட்டை செல்வராஜ் மகன் பிரசாந்த், போடிச்செட்டித்தெரு சிவக்குமார் மகன் தேவநாதன், நெல்லிக்குப்பம் கணபதி ஆகியோர் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.இதையடுத்து நேற்று திருப்பாதிரிப்புலியூரில் பதுங்கி இருந்த மளிகைக்கடைக்காரர் பாரதி, சரவணன், ராம்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்ட பாரதி போலீசாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெங்களூருவில் இருந்து மொத்த வியாபாரி ஒருவர் வாங்கி காய்கறி ஏற்றி வரும் லாரியில் அனுப்பி வைப்பார். இதை நான் வீட்டில் பதுக்கி வைத்து, கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்தேன். இதை போலீசார் எப்படியோ கண்டு பிடித்து, அதை பறிமுதல் செய்து, எங்களையும் கைது செய்து விட்டார்கள் என்றார்.

மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கைதான பாரதியின் சொந்த ஊர் பண்ருட்டி கணிசப்பாக்கம் அண்ணாநகர் ஆகும். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வந்து, இந்த தொழிலில் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வந்துள்ளதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் செய்திகள்