புவனகிரியில் பரபரப்பு: பா.ஜ.க. கொடிகம்பத்தில் தேசிய கொடி ஏற்றம் - 10 பேர் கைது

புவனகிரியில் பா.ஜ.க. கொடி கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இது தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2020-08-15 22:15 GMT
சிதம்பரம்,

சிதம்பரம் அருகே புவனகிரி பெரியார் சிலை அருகே நேற்று காலை புவனகிரி ஒன்றிய பா.ஜ.க. தலைவர் ராமநாதன் தலைமையில் அக்கட்சியினர் சுதந்திர தினவிழாவையொட்டி பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றினர். இது பற்றி அறிந்த விடுதலை சிறுத்தை கட்சி, திராவிட கழகம், த.மு.மு.க, த.வா.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் அங்குள்ள பெரியார் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கட்சி கொடி கம்பத்தில் எப்படி பா.ஜ.க.வினர் தேசிய கொடியை ஏற்றலாம்.

இது அவமதிப்பு செயலாகும். எனவே சம்பந்தப்பட்ட பா.ஜ.க.வினரை போலீசார் உடனே கைது செய்ய வேண்டும் என கூறி கோஷங்களை எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக், புவனகிரி தாசில்தார் சுமதி ஆகியோர் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதையடுத்து பா.ஜ.க. வினரை அழைத்து அவர்களிடம் கொடி கம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை அகற்றுமாறு அதிகாரிகள் கூறினர்.

அதற்கு அவர்கள் மாலை 6 மணிக்கு பிறகு கொடியை அகற்றுகிறோம் என கூறினர். இதையடுத்து அதிகாரிகள், பா.ஜ.க. கொடிகம்பத்தில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை கழற்றி வருவாய்த்துறை அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் பா.ஜ.க.வை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்