இன்று முழு ஊரடங்கு காய்கறி, இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள் கூட்டம்
இன்று முழு ஊரடங்கின் காரணமாக தூத்துக்குடியில் நேற்று காய்கறி, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமாக குவிந்தனர்.
தூத்துக்குடி,
கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஆகஸ்டு 31-ந் தேதி வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி ஆகஸ்டு மாதம் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் நேற்று காலை முதலே புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் மற்றும் வ.உ.சி கல்லூரி அருகே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டுகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை மக்கள் வாங்கி வைப்பது வழக்கம். ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு இருப்பதால் சனிக்கிழமையே பொதுமக்கள் காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்கின்றனர்.
விலை நிலவரம்
தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ கத்தரிகாய் ரூ.20-க்கும், வெண்டைக்காய் ரூ.15-க்கும், தக்காளி ரூ.25-க்கும், உருளைகிழங்கு ரூ.40-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் ரூ.15-க்கும், முட்டைகோஸ் ரூ.35-க்கும், தேங்காய் ரூ.35-க்கும், பீன்ஸ் ரூ.50-க்கும், அவரைக்காய் ரூ.15-க்கும், இஞ்சி ரூ.120-க்கும், பூண்டு ரூ.140-க்கும், விற்பனை செய்யப்பட்டது.
இறைச்சிக் கடை
அதேபோல் இறைச்சிக் கடைகளிலும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இறைச்சிக் கடைகளில் மக்கள் வரிசையில் நின்று இறைச்சி வாங்கி சென்றனர் இறைச்சிக் கடைகள் நேற்று இரவு வரை திறந்திருந்தது.