சுதந்திர தினத்தையொட்டி எடப்பாடி பழனிசாமி கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் மக்கள் பங்கேற்காமல் விழா நடைபெற்றது

இந்தியாவின் சுதந்திர தினத்தையொட்டி சென்னை ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

Update: 2020-08-16 00:22 GMT
சென்னை, 

தமிழகத்தில் அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். போர் நினைவுச் சின்னத்துக்கு வந்த அவரை அங்கிருந்து காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருந்த அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் வந்து இறங்கினார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

கைகுலுக்கல் இல்லை

அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் பி.என்.ராவ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் புனீட் சதா, தாம்பரம் விமானப்படைத் தளம் முதன்மை நிர்வாக அதிகாரி குரூப் கேப்டன் எஸ்.எம்.மனோகரன், கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை ஐ.ஜி. எஸ்.பரமேஷ், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்துவைத்தார்.

பொதுவாக முதல்-அமைச்சருடன் கைகுலுக்கி அறிமுகம் செய்வது வழக்கம். ஆனால் கொரோனா சமூக விலகலைத் தொடர்ந்து, 3 அடி இடைவெளியில் நின்றபடி முதல்-அமைச்சர் கைகூப்பி வணங்கினார். அவர்கள் பதிலுக்கு சல்யூட் அடித்தனர்.

அணிவகுப்பு மரியாதை

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.

அணி வகுப்பு படைப் பிரிவில் குறைந்த அளவில் வீரர்கள் பங்கேற்றனர். பேரிடர் மீட்புப் படை, கடலோர பாதுகாப்புக் குழுமம், சென்னை போலீஸ் கமாண்டோ படைப் பிரிவு, சிறப்பு காவல் படைப் பிரிவு, நீலகிரி படைப் பிரிவு, குதிரை படைப் பிரிவு உள்ளிட்ட படைப் பிரிவுகள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றன.

சுதந்திர தின உரை

பின்னர் கோட்டை கொத்தளத்துக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை முதல்-அமைச்சர் ஏற்றி வைத்தார். அப்போது கொடிக்குள் இருந்த ரோஜா இதழ்கள் காற்றில் பறந்து அங்கிருந்த அனைவர் மீதும் விழுந்தன. மூவர்ண பலூன்களும் பறக்கவிடப்பட்டன.

மேலும், போலீஸ் பேண்டு வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தார்கள். முதல்-அமைச்சர் மற்றும் அனைவரும் சல்யூட் அடித்தபடி நின்று கொண்டிருந்தனர்.

மக்கள் ஒத்துழைப்பு

அதைத் தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:-

சுதந்திரத்தின் பயனை அனைவரும் பெறும் வகையிலான பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி, தமிழ்நாடு எல்லாத் துறைகளிலும் அளப்பறிய முன்னேற்றம் கண்டு, முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

உலகத்தையே கொரோனா தொற்று புரட்டிப்போட்டு கொண்டிருக்கிறது. விலகி இருங்கள், விழித்திருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்ற எனது கனிவான வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு மக்கள் உரிய ஒத்துழைப்பை வழங்கி வருவதை அறிவேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விருதுகள் வழங்கினார்

அதன் பின்னர் பல்வேறு விருதுகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பின்னர் விருது பெற்றவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன்பிறகு கோட்டையில் இருந்து அவர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள் பங்கேற்றனர். அமைச்சர்கள், அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு சமூக இடைவெளி விட்டு இருக்கைகள் போடப்பட்டு இருந்தன.

தற்போது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்திருந்தது. எனவே இந்த விழாவில் பொதுமக்கள், மாணவர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

மேலும் செய்திகள்