தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கி “திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்றுங்கள்”

“தியேட்டர்களை திறக்கவும், படப்பிடிப்பை தொடங்கவும் உடனே அனுமதி வழங்கி, திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்களை காப்பாற்ற வேண்டும்” என்று தமிழக அரசுக்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Update: 2020-08-16 00:18 GMT
சென்னை, 

“தமிழ்நாட்டில், 1,020 திரையரங்குகள் உள்ளன. அந்த திரையரங்குகளில் 25 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வந்தார்கள். கொரோனா மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக திரையரங்குகள் முழுவதும் மூடப்பட்டன. நேற்றுடன் 151-வது நாளாக திரையரங்குகள் அனைத்தும் மூடிக்கிடக்கின்றன.

10 லட்சம் குடும்பங்கள்

இதனால், திரையரங்க ஊழியர்கள் மற்றும் திரையரங்குகளை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த குடும்பங்களை சேர்ந்த 3 லட்சம் பேர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். படப்பிடிப்பு நடைபெறாததால் திரை துறையை சேர்ந்த 10 லட்சம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களை காப்பாற்றும்படி, மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்.

திரையரங்குகளுக்கு படம் பார்க்க வருபவர்கள்தான் எங்கள் முதலாளிகள். அவர்களை காப்பாற்றும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. அதற்கு மத்திய-மாநில அரசுகள் கூறும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறோம். பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராக இருக்கிறோம்.

நல்ல முடிவு

அதனால் மத்திய-மாநில அரசுகள் நல்ல முடிவெடுத்து படப்பிடிப்புகளை தொடங்குவதற்கும், திரையரங்குகளை திறப்பதற்கும் உடனடியாக உத்தரவிட வேண்டும்.”

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்