தண்டையார்பேட்டையில் பயங்கரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை
தண்டையார்பேட்டையில் மது விற்றதை போலீசாருக்கு தெரிவித்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொல்லப்பட்டார். தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டை வீராகுட்டி தெருவை சேர்ந்தவர் கேசவன் (வயது 40). விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். இவர் நேற்று இரவு வீராகுட்டி தெருவில் நடந்து சென்றார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் கேசவனை விரட்டியது. பின்னர் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் உருக்குலைந்த கேசவன் உயிருக்கு போராடிய நிலையில் கீழே சரிந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத அந்த மர்மகும்பல் அங்கு இருந்த வாகனங்களை அடித்து நொறுக்கி சூறையாடியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்மகும்பல் தப்பி ஓடி விட்டது.
கொலை
இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த கேசவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த கொலை சம்பவம் குறித்து தண்டையார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே பகுதியில் ஊரடங்கு நேரத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து கேசவன் போலீசில் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மதுபாட்டில்களை விற்ற மர்ம கும்பல் கேசவனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்ததாக தெரிய வருகிறது. எனவே போலீசார் தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.