நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது: 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி சாவு - மன்னார்குடி அருகே பரிதாபம்

மன்னார்குடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 4 தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.

Update: 2020-08-15 23:00 GMT
மன்னார்குடி,

நாமக்கல் மாவட்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை ஒரு லாரி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பிரமியம் பகுதியை சேர்ந்த பழனி மகன் சந்திரசேகரன்(வயது23), புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பகிரதம்பாள்புரம் நெய்வதலி பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்(39), அறந்தாங்கி என்.எல்.புரம் பகுதியை சேர்ந்த வெங்கடாசலம்(43), மேற்குவங்காள மாநிலம் முஸ்தாலி பகுதியை சேர்ந்த குரோராம்ஜி மகன் ஷிபுமஜி(21) ஆகிய 4 தொழிலாளர்கள் இருந்தனர். லாரியை திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காச்சியப்பாகவுண்டவலசு பகுதியை சேர்ந்த ரமேஷ்(35) என்பவர் ஓட்டி வந்தார்.

அதிகாலை 2.30 மணி அளவில் இந்த லாரி மன்னார்குடி அருகே உள்ள நெடுவாக்கோட்டை பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்றொரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் கோழி ஏற்றி வந்த லாரியில் இருந்த சந்திரசேகரன், வெங்கடாசலம், மற்றொரு வெங்கடாசலம், மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஷிபுமஜி ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். டிரைவர் ரமேஷ் காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மன்னார்குடி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கி இருந்த உடல்களை மீட்க முயன்றனர். ஆனால் லாரியின் முன்பகுதி முழுவதும் நசுங்கி சேதமடைந்து இருந்ததால் பலியானவர்களின் உடல்களை லாரியில் இருந்து மீட்க முடியவில்லை. இதனால் எந்திரம் மூலம் லாரியின் முன்பகுதியை வெட்டி எடுத்து 4 பேரின் உடல்களையும் வெளியே எடுத்தனர். பின்னர் அவர்களின் உடல்கள் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நின்றுகொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் மன்னார்குடி பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்