எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் கர்நாடகத்தின் வளர்ச்சியே அரசின் குறிக்கோள் சுதந்திர தின விழாவில் எடியூரப்பா பேச்சு
எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் கர்நாடகத்தின் வளர்ச்சி ஒன்றே அரசின் குறிக்கோள் என்று சுதந்திர தின விழா உரையில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.
பெங்களூரு,
நாடு முழுவதும் சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பெங்களூருவில் நேற்று சுதந்திர தினவிழா எளிமையாக கொண்டாடப்பட்டது. பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில் 500 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. காலை 8.58 மணியளவில் முதல்-மந்திரி எடியூரப்பா மானேக்ஷா மைதானத்தில் உள்ள விழா மேடைக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் காலை 9 மணியளவில் முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, நடந்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதை முதல்-மந்திரி எடியூரப்பா ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சுதந்திர தினத்தையொட்டி மாநில மக்களுக்கு எடியூரப்பா ஆற்றிய உரையில் பேசியதாவது:-
சவால்களை எதிர்கொள்ள...
மாநில மக்களுக்கு சுதந்திர தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளேன். மாநிலத்தில் வளர்ச்சி சக்கரத்தை முன்னேடுத்து செல்ல இந்த அரசு உறுதி அளிக்கிறது. மக்களின் வாழ்க்கையை முன்னேடுத்து செல்லும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய நிலையும் இருக்கிறது. மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. பா.ஜனதா அரசு ஆட்சிக்கு வந்த ஒரு ஆண்டில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உருவானது. குறிப்பாக வெள்ள பாதிப்பு மற்றும் கொரோனா வைரசை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
இந்த பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மக்களுக்கு தைரியத்தை கொடுக்க அரசு அனைத்து விதமான நடவடிக்கையும் எடுத்து வருகிறது. மாநிலத்தில் கொரேனாவுக்கு மத்தியிலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை அரசு வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தது. கர்நாடக அரசின் வழிகாட்டுதலை மத்திய அரசும், பிற மாநிலங்களையும் பின்பற்றியது. கொரோனா பாதிப்பு இருந்தாலும், அந்த மாணவர்களுக்கும் சி.இ.டி. தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தவும் அரசு அனைத்து விதமான நடவடிக்கையும் எடுத்துள்ளது.
ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு
குடகு, கடலோர மாவட்டங்கள், வட கர்நாடக மாவட்டங்கள் சேர்ந்து 11 மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களில் நிவாரண பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. மழை, வெள்ளத்தால் மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சரியான நிவாரண உதவிகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களிலும் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்குகளுக்கு ரூ.984 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
தலைமை செயலாளர் தலைமையிலேயே மழை பாதித்த மாவட்டங்களில், பொறுப்பு மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் நிவாரண பணிகளை மேற்கொண்டனர். மக்கள் கஷ்டப்படும் நேரத்தில், அவர்களுக்கு உதவ உறுதியான நடவடிக்கையை அரசு எடுத்தது. அதனால் மழை, வெள்ள பாதிப்பு மற்றும் கொரோனா காரணமாக எந்த விதமான சிரமத்தையும் அனுபவிக்க இந்த அரசு தயங்கியதில்லை. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பேருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுபவர்கள் உயிர் இழந்தால் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.
பீதி அடைய வேண்டாம்
மாநிலத்தில் உள்ள கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கற்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏ.பி.எம்.சி. சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு சட்டம் இயற்றப்பட்டதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். அடல் பூ நீர்ப்பாசன திட்டத்தின் கீழ் ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாநிலத்தில் 14 மாவட்டங்களில் 41 தாலுகாக்களில் 1,199 கிராம பஞ்சாயத்துகள் பயன் அடையும். கல்யாண கர்நாடக வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. சிவமொக்கா, கார்வார் மற்றும் விஜயாப்புராவில் விமான நிலையங்கள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு மத்தியிலும் மாநிலத்தில் ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 101 தொழில்களுக்கான திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக மக்கள் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை. நானும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானேன். அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன். கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அனைத்து மருத்துவ வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
வளர்ச்சி மட்டுமே குறிக்கோள்
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வுகாண, புறநகர் ரெயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. புறநகர் ரெயில் திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. பெங்களூருவில் மெட்ரோ 2-வது கட்ட பணிகள் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும். 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் ரூ.30 ஆயிரத்து 695 கோடியில் நடைபெற்று வருகிறது. மக்கள்-நண்பர்கள் திட்டத்திற்காக பையப்பனஹள்ளி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே 110 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு, அந்த திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் மழை, வெள்ள பாதிப்பு, கொரோனா இருந்தாலும், வளர்ச்சி மட்டுமே இந்த அரசின் ஒரு நோக்கம். கர்நாடகத்தை வளர்ச்சி மாநிலமாக மாற்றுவதே (கல்யாண ராஜ்ய) அரசின் ஒரே குறிக்கோள். எத்தனை பிரச்சினைகள், சவால்களை எதிர் கொண்டாலும் மாநிலத்தின் வளர்ச்சியில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. அதற்கு தேவையான திட்டங்களை கொண்டு வருவது, நடவடிக்கைகளை எடுப்பது உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு முதல்-மந்திரி எடியூரப்பா பேசினார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
பெங்களூரு மானேக்ஷா மைதானத்தில் நடந்த சுதந்திர தினவிழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மைதானம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. அதே நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மானேக்ஷா மைதானத்தில் போலீசாரின் சாகச நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. முதல்-மந்திரி எடியூரப்பா தேசிய கொடி ஏற்றிய போது கூட வானில் பறந்தபடி தேசிய கொடிக்கு ஹெலிகாப்டர் மூலமாக பூக்கள் தூவப்படவில்லை. பொதுமக்களும் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. இதனால் நேற்று மானேக்ஷா மைதானத்தில் நடந்த சுதந்திர தின விழா எளிமையாக காட்சி அளித்தது.
பெங்களூருவை போன்று ஒவ்வொரு மாவட்டங்களின் தலைநகரிலும், பொறுப்பு மந்திரிகள் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். பெங்களூரு ராஜ்பவனில் கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.