கொரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
சென்னை,
பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் (வயது 74). அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.
கடந்த 5-ந்தேதி அவர் வெளியிட்ட வீடியோவில், தனக்கு லேசான கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்றும், தற்போது காய்ச்சல் குறைந்துள்ளது என்றும் கூறியிருந்தார். யாரும் கவலைப்பட வேண்டாம். இன்னும் 2 நாட்களில் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி விடுவேன் என்றும் தெரிவித்து இருந்தார்.
இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கவலைக்கிடம்
இந்த நிலையில் தற்போது எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை திடீர் மோசம் அடைந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கடந்த 5-ந்தேதி கொரோனா அறிகுறியுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 13-ந்தேதி இரவு அவருடைய உடல்நிலை மோசம் அடைந்தது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையின்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு உயிர்காக்கும் கருவிகள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தபோதிலும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமாகவே உள்ளது.
தீவிர சிகிச்சை பிரிவின் மருத்துவ குழு கண்காணிப்பில் அவர் இருக்கிறார். அவருடைய ரத்த ஓட்ட ஹீமோடைனமிக் மற்றும் மருத்துவ நிலவரங்கள் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சீராக உள்ளது
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் கூறும்போது, “எனது தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்றார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விரைவில் குணமடைய வேண்டி இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட திரையுலகினர் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
மனைவிக்கும் கொரோனா
இந்த நிலையில் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மனைவி சாவித்திரிக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத்தொடர்ந்து அவர் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.