ஊர்வலத்துக்கு தடை எதிரொலி: வீடுகளில் வைத்து வழிபட சிறிய விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்தன
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் எதிரொலியாக வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான சிறிய ரக விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
சென்னை,
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ராட்சத விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுவது வழக்கம். கிரிக்கெட் விளையாடும் விநாயகர், மோட்டார் சைக்கிள் ஓட்டும் விநாயகர், போலீஸ் வேடத்தில் விநாயகர் என பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம். பின்னர் அந்த சிலைகள் நீர்நிலைகளில் கொண்டு சென்று கரைக்கப்படும்.
இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று பரவிவருவதால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வதற்கும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. வீடுகளில் மட்டும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா நோய்க்கு சிகிச்சை
இதனால், வழக்கமான பெரிய சிலைகளுக்கு பதில் மிகச்சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதே நேரத்தில் விநாயகர் சதுர்த்தியின்போது அப்போதைய ‘டிரெண்டிங்’குக்கு ஏற்ற விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த ஆண்டு காஞ்சீபுரம் அத்திவரதரை சித்தரிக்கும் வகையில், அத்திவரதர் வடிவத்தில் விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டன.
தற்போது கொரோனா பரவி வரும் நிலையில், கொரோனா நோய்க்கு விநாயகர் சிகிச்சை அளிப்பது போன்ற சிலை புது வரவாக சந்தைக்கு வந்துள்ளது. தனது வாகனமான எலிக்கு, விநாயகர் ஸ்டெதாஸ்கோப்பை வைத்து பரிசோதிப்பது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ரூ.200 முதல் ரூ.1,500 வரை...
இந்த ஆண்டு விற்பனைக்கு வந்துள்ள சிறிய ரக விநாயகர் சிலைகள் குறித்து சென்னை கொசப்பேட்டை அருணாசலம் தெருவை சேர்ந்த சிலை விற்பனையாளர் பிரகாஷ் கூறியதாவது:-
வழக்கமாக விநாயகர் சதுர்த்திக்கு 3 அடி முதல் 15 அடி உயரத்துக்கும் மேல் வரை விநாயகர் சிலைகள் வெளியிடங்களில் இருந்து வரவழைக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பெரிய வகை சிலைகள் கொண்டு வரப்படவில்லை.
எனவே, நாங்களே களிமண்ணில் சிறிய ரக விநாயகர் சிலைகளை செய்து விற்பனைக்கு வைத்துள்ளோம். இந்த சிலைகள் ½ அடி உயரம் முதல் 1½ அடி உயரம் வரை ரூ.200 முதல் ரூ.1,500 வரை மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு புதுவரவாக கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் விநாயகர் சிலையை செய்து விற்பனைக்கு வைத்து உள்ளோம். இந்த சிலையின் விலை ரூ.1,500 ஆகும்.
மேலும், குழந்தை வடிவ விநாயகர், லட்டு விநாயகர், ஸ்கூட்டரில் செல்லும் விநாயகர், ஆலிலை விநாயகர் போன்ற பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் புது வரவாக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.