உப்பளம் மைதானத்தில் சுதந்திர தின விழா: நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்

புதுவையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்.

Update: 2020-08-14 23:31 GMT
புதுச்சேரி, 

புதுவை உப்பளம் இந்திராகாந்தி மைதானத்தில் சுதந்திர தின விழா இன்று (சனிக் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மைதானத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழா நடக்கும் மைதானத்துக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி காலை 9.04 மணிக்கு வருகிறார். அவரை தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோர் வரவேற்று அழைத்து வருகின்றனர்.

நேராக விழா மேடைக்கு வரும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தேசியக்கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். அப்போது போலீஸ் பேண்டு வாத்திய குழுவினர் தேசியகீதம் இசைப்பார்கள்.

அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பினை பார்வையிடுகிறார். அதன்பின் விழா மேடைக்கு திரும்பும் அவர் சுதந்திர தின உரையாற்றுகிறார்.

அணிவகுப்பு மரியாதை

தொடர்ந்து அவர் கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களை கவுரவிக்கிறார். அதன்பின் போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடக்கிறது. விழாமேடையில் நின்றவாறு அவர்களின் அணிவகுப்பு மரியாதையை முதல்-அமைச்சர் நாராயணசாமி ஏற்றுக்கொள்கிறார்.

அத்துடன் தேசியகீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. தொடர்ந்து சட்டமன்றத்துக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி திரும்புகிறார்.

தேனீர் விருந்து ரத்து

மத்திய அரசு வழிகாட்டுதலின்படி சுதந்திர தினவிழாவில் என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

சுதந்திர தினத்தன்று மாலையில் கவர்னர் மாளிகையில் கவர்னர் கிரண்பெடி முக்கிய பிரமுகர்களுக்கு தேனீர் விருந்து அளிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்