நாகர்கோவிலில், கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயற்சி - மனைவி உள்பட 3 பேர் கைது; கள்ளக்காதலன் தலைமறைவு
நாகர்கோவிலில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில்,
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் அருகில் உள்ள கேசவ திருப்பாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் (வயது 38). புகைப்பட கலைஞரான இவர் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு ஆர்டரின் பேரில் புகைப்படம் எடுக்கச் செல்வது வழக்கம். இவருக்கு திருமணமாகி 4½ வயதில் ஒரு மகன் உள்ளான்.
சம்பவத்தன்று இரவு கணேஷ், தனது மனைவி மற்றும் மகனுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு சுமார் 1.45 மணி அளவில் கணேஷ் அலறினார். குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது கணேஷ் தலை உள்பட உடலின் பல இடங்களில் பலமான ரத்த காயம் ஏற்பட்டிருந்தது.
வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருந்த தன்னை இருளில் யாரோ தாக்கியதாக அவர் வடசேரி போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து கணேசை போலீசார் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளஸ்வரி கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பூட்டிய வீட்டுக்குள் நுழைந்து கணேசை தாக்கிய சம்பவத்தில், அவருடைய மனைவி மீது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து கணேசின் மனைவி காயத்ரியிடம் (35) போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார். இதனால் சந்தேகம் மேலும் வலுத்ததால், அவரிடம் கிடுக்கிப்பிடியை போலீசார் மேற்கொண்டனர். இதில் அவர், கள்ளக்காதல் விவகாரத்தில் கூலிப்படையை ஏவி கணவரை கொல்ல முயன்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது, காயத்திரிக்கும், நாகர்கோவிலில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலன் மழலையர் பள்ளி நடத்தியபோது காயத்ரி வேலைக்கு சென்றதாகவும், அதன் மூலம் அவர்களுக்கிடைய தொடர்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த பழக்கத்தின் காரணமாக தனது கணவரிடம் உறவினருக்கு பணம் கடனாக கொடுக்க வேண்டும் என்று கூறிவிட்டு, கள்ளக்காதலனுக்கு தனது வீட்டை அடகு வைத்து ரூ.10 லட்சத்தை அவர் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அந்த பணத்தை கணவர் கணேஷ் அடிக்கடி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த காயத்ரி கணேசை தீர்த்துக்கட்ட திட்டமிட்டுள்ளார். இதற்கு கள்ளக்காதலனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்படி காயத்ரி சம்பவத்தன்று நெய்யூரைச் சேர்ந்த கருணாகரன், குருந்தங்கோடு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஆகியோரை வீட்டுக்கு வரவழைத்து கணேசை நள்ளிரவில் தாக்க செய்துள்ளார்.
இதில் படுகாயமடைந்த கணேஷ் அலறியதும் அவர்கள் 2 பேரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் காயத்ரி, கருணாகரன், விஜயகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். காயத்ரியின் கள்ளக்காதலன் தலைமறைவாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.