திருப்பூரில், விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரிப்பு
திருப்பூர் மாநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
திருப்பூர்,
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இதன் பின்னர் இந்த சிலைகள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆண்டிபாளையம் குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே உள்ளது. இதன் காரணமாக தற்போது திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஏராளமான கடைகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
பல்வேறு வடிவங்கள் மற்றும் நிறங்களில் விநாயகர் சிலைகள் தயாரித்து சாலையோர கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பலரும் தற்போது இருந்தே விநாயகர் சிலைகளை வாங்க தொடங்கியுள்ளனர். சிலையின் அளவிற்கு ஏற்ப விலையும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் பலரும் தங்களுக்கு பிடித்த வகையிலான சிலைகளை வாங்கி செல்கிறார்கள். தற்போது இந்த விற்பனையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இதற்கிடையே தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி விழாவை இந்த ஆண்டு பொதுமக்கள் வீடுகளில் கொண்டாட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
இதனால் மேலும், விநாயகர் சிலைகள் விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் எதிர்பார்த்தபடி உள்ளனர்.