கோவை மாவட்டத்தில், பெண் டாக்டர் உள்பட 289 பேருக்கு கொரோனா - 7 பேர் பலி

கோவை அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர் உள்பட 289 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 7 பேர் பலியானார்கள்.

Update: 2020-08-14 06:00 GMT
கோவை,

கோவை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த 22 வயது பெண் பயிற்சி டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதுபோன்று மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 21 பேர், அம்மன்குளத்தை சேர்ந்த 3 பேர், எஸ்.எஸ்.குளம் பகுதியை சேர்ந்த 3 பேர், பொள்ளாச்சியை சேர்ந்த 9 பேர், ஆலாந்துறையை சேர்ந்த 3 பேர் மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியை சேர்ந்த 289 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,884 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 5,805 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து 1,923 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 38 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கடந்த 11-ந் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்ட 28 வயது வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போல், கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த 28 வயது வாலிபர், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைப்பெற்று வந்த 62 வயதான 2 பேர், 65 வயது முதியவர், 54 வயது ஆண், 75 வயது மூதாட்டி உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156-ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்